பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414

என் சரித்திரம்

அவருடைய ஸ்தானத்தில் சித்தூர் ஹைஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக இருந்த தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதரென்பவரை நியமித்தார்கள். அவர் சென்னையில் மிக்க புகழ் பெற்ற வித்துவானாக விளங்கிய ஸ்ரீ விசாகப் பெருமாளையரிடம் பாடம் கேட்டவர்; அவர் எழுதிய பஞ்ச லக்ஷண வினாவிடை, பால போதவிலக்கணம் என்பவற்றையும், நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகையுரை, தண்டி யலங்கார வுரை, வச்சணந்தி மாலை முதலிய நூல்களையும் அச்சிட்டவர்; தமிழ் நாட்டில் அங்கங்கே வழங்கும் தனிப் பாடல்களையெல்லாம் திரட்டித் தனிப் பாடற்றிரட்டு என்ற பெயரோடு முதல் முதல் வெளியிட்டவர் அவரே.

சென்னையில் பலகாலமிருந்து தாண்டவராய முதலியார் முதலிய வித்துவான்களோடு பழகிய அவரைப் பார்த்துப் பேச வேண்டுமென்ற விருப்பம் சுப்பிரமணிய தேசிகருக்கு இருந்தது. அவர் வேலையிலமர்ந்து ஒரு மாத காலமாயிற்று. சுப்பிரமணிய தேசிகருடைய புலமையையும் சிறந்த குணங்களையும் அவரும் கேள்வியுற்றவராதலின் அப் பெரியாரைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவலோடிருந்தார். ஆனாலும், “பெரிய இடமாயிற்றே; நாம் போனால் அவர்களைச் சுலபமாகப் பார்க்க முடியுமோ முடியாதோ! அவர்கள் விஷயமாக ஏதேனும் ஒரு பிரபந்தம் இயற்றிக் கொண்டு போய்ப் பார்க்கலாம்” என்று எண்ணிச் சுப்பிரமணிய தேசிகர் விஷயமாக ஒரு நான்மணிமாலையை இயற்றினார்.

தேசிகர் ஆவல்

சுப்பிரமணிய தேசிகருக்குப் பண்டிதரைப் பார்த்துப் பேச வேண்டுமென்ற ஆவல் அதிகமாயிற்று. ஆதீன வித்துவானும் தேசிகருக்குத் தமிழ்ப் பாடம் சொன்னவருமான தாண்டவராயத் தம்பிரானென்னும் புலவர் சிகாமணி சென்னையில் சில காலம் இருந்தவர். அங்குள்ள வித்துவான்களோடு பழகினவர். சுப்பிரமணிய தேசிகர் அத்தம்பிரான் மூலமாகச் சென்னைப் புலவர்களுடைய பெருமையை அறிந்திருந்தார். சந்திரசேகர கவிராஜ பண்டிதர் மூலமாகப் பின்னும் விரிவாகத் தெரிந்து கொள்ள அப்போது எண்ணினார்.

ஒரு நாள் தேசிகர் என்னை அழைத்து, “இன்று கும்பகோணம் வரையில் போய் வர வேண்டும்” என்று சொன்னார்.

வழக்கப்படி மடத்துக் காரியமாக யாரிடமேனும் அனுப்புவார் என்று எண்ணினேன். “சந்திரசேகர கவிராஜ பண்டிதரிடம் நாம்