பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் பெற்ற சன்மானங்கள்

441

வந்தார். அவர் கும்பகோணத்திலிருந்த காலத்தில், தமிழ் படிப்பதனால் பிரயோசனம் ஒன்றும் இல்லையென்றும், இங்கிலீஷ் படித்தால்தான் நன்மை உண்டென்றும் என் தந்தையாரிடம் வற்புறுத்திக் கூறினவர். அவர் தேசிகருடனிருந்த என்னைக்கண்டு மிக்க மகிழ்ச்சியை அடைந்ததோடு, “இவரை எனக்கு நன்றாகத் தெரியும். இளமை தொடங்கியே தமிழ் படிக்க வேண்டுமென்ற ஆவல் பலமாக இவருக்கு உண்டு. இவரைப் பாதுகாக்க வேண்டும்” என்று தேசிகரிடமும் சொன்னார்.

தேசிகரை யாரேனும் கனவான்கள் பார்க்க வந்தால் பல விதமான விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். இடையிடையே நான் தமிழ்ப் பாடல்களைச் சொல்லிப் பிரசங்கம் செய்வேன். சுப்பிரமணிய தேசிகர் விஷயமாகப் பிள்ளையவர்களும் வேதநாயகம் பிள்ளையும் இயற்றிய செய்யுட்களைச் சொல்லாமல் இரேன்.

கடுக்கனும் மோதிரமும்

மன்னார்குடியில் தங்கிய போது தேசிகர் என் காதில் இருந்த பழைய கடுக்கனைக் கழற்றச் செய்து ஐம்பது ரூபாய்க்கு மேல் பெறுமானமுள்ள அரும்பு கட்டிய புதிய சிவப்புக்கல் (கெம்பு) கடுக்கனை அணிவிக்கும்படி கஸ்தூரி ஐயங்காரென்ற ஒருவரிடம் உத்தரவு செய்தார். பழைய கடுக்கனுக்கு ஏற்றபடி என் காதுகளில் சிறிய துவாரங்களே இருந்தன. அவற்றிற் பெரிய கடுக்கனைப் போட்டபோது எனக்கு மிகவும் நோவு உண்டாயிற்று. “பெண்கள் கைவளை, நகைகள் முதலியவற்றைச் சந்தோஷத்தோடு போட்டுக் கொள்கிறார்களே; அவர்களுடைய பொறுமையைக் கண்டு ஆச்சரியப் படவேண்டும்!” என்று எண்ணினே். காதில் இரத்தம் வர வர அக்கடுக்கன்களை ஐயங்கார் போட்டு விட்டார். “பிறகு போட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லியும் அவர் விடவில்லை.

மன்னார்குடியிலிருந்து புறப்பட்டுச் செல்லுகையில் பட்டுக் கோட்டையில் தேசிகர் எனக்கு ஒரு மோதிரம் வழங்கிக் கையில் அணிந்து கொள்ளச் செய்தனர். அப்படியே திருப்பெருந்துறைக்குச் சென்று சில தினங்கள் தங்கினோம். திருப்பெருந்துறையில் அப்போது ஆலய விசாரணை செய்து வந்த சுப்பிரமணியத் தம்பிரான் தேசிகருடைய விஜயத்துக்காக விசேஷமான ஏற்பாடுகள் செய்து மிகவும் கவனித்துக் கொண்டார்.

பொன்னங்கால்

அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுகையில் இடையே ஓரிடத்தில் சுப்பிரமணிய தேசிகரது பல்லக்குச் சற்று விரைந்து சென்றது.