பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

442

என் சரித்திரம்

நாங்கள் பின்தங்கிச் செல்லலானோம். சிறிது தூரம் போனபோது தேசிகர் ஓர் ஓடையின் மணலில் பல மரங்கள் செறிந்த நிழற்பரப்பில் தங்கியிருப்பதைக் கண்டோம். அவரைச் சுற்றிலும் பல புதிய கனவான்கள் இருந்தார்கள். தாம்பாளங்களில் பல வகையான பழங்களும், வெற்றிலை, பாக்கு, கற்கண்டு முதலியனவும் அவரருகில் வைக்கப் பெற்றிருந்தன. ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் பணம் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

நாங்கள் அங்கே இறங்கித் தேசிகரை அடைந்தபோது அவர் அங்குள்ள சில கனவான்களைச் சுட்டிக் காட்டி, “இவர்கள், இராமநாதபுரம் இரகுநாத சேதுபதியின் மீது ஒரு துறைக்கோவை பாடி ஒவ்வொரு கவிக்கும் ஒவ்வொன்றாக நானூறு பொன் எலுமிச்சம்பழம் பரிசு பெற்ற அமுத கவிராயருடைய பரம்பரையினர். இந்த இடம் அந்தக் கோவைக்காக அமுத கவிராயருக்குச் சேதுபதி அரசரால் விடப்பட்ட ‘பொன்னங்கால்’ என்னும் கிராமம். இவர்கள் இப்போது திருமகள் விலாசம் பெற்றுச் சௌக்கியமாக இருக்கிறார்கள்” என்று கூறிப் பழக்கம் செய்வித்தனர்.

பிரயாண காலத்தில் எப்பொழுதும் சுப்பிரமணிய தேசிகரோடே இருந்தமையால் அவருடைய அருங்குணங்களை நன்றாக அறியும் சந்தர்ப்பங்கள் வாய்த்தன. அப்பொழுதப்பொழுது வேடிக்கையாகப் பேசி உத்ஸாக மூட்டுவார். அங்கங்கேயுள்ள தலங்களைப் பற்றிய வரலாறுகளையும், வேறு சரித்திர விஷயங்களையும் எடுத்துச் சொல்லுவார். ஆகாரம் முதலிய சௌகரியங்களில் சிறிதும் குறைவு நேராத வண்ணம் அடிக்கடி விசாரித்து வருவார்.

இதனால் ஒவ்வொரு நாளும் ஆனந்தமாகப் பொழுது போயிற்று. புதிய புதிய இடங்களையும் புதிய புதிய மனிதர்களையும் பார்க்கும் போது மனம் குதூகலமடைந்தது. கண்டியும், சால்வையும், கடுக்கனும், மோதிரமுமாகிய சம்மானங்களும், தேசிகருடைய அன்பு கனிந்த வார்த்தைகளும், அங்கங்கே கண்ட இனிய காட்சிகளும் என்னை ஒரு புதிய மனிதனாகச் செய்தன. நான் சந்தோஷத்தால் பூரித்தேன்.

அத்தியாயம்—73

நானே உதாரணம்

ப்பிரமணிய தேசிகர் எழுபொற் கோட்டை வழியாகக் காளையார் கோயில் முதலிய ஸ்தலங்களைத் தரிசனம் செய்து