பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

444

என் சரித்திரம்

மிக்க விமரிசையுடன் பூஜை முதலியவற்றைச் செவ்வனே நடத்தி மகேசுவர பூஜையும் செய்வித்து ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு இரண்டு வேளையும் அன்னமளித்தார். அவர் பெரிய கண்டிராக்டர்; தருமசிந்தை மிக்கவர்; குரு பக்தியும் சிவ பக்தியும் நிரம்பியவர்; மதுரை வாசிகளுக்கு அவரிடத்திற் பேரன்பு இருந்தமைக்கு அடையாளமாக, ‘ஆதிமூலம் பிள்ளைத் தெரு’ என்று ஒரு தெருவிற்குப் பெயர் வைத்திருக்கின்றனர்.

மதுரை நகரத்திலிருந்த கலெக்டர் ஆபீஸ் சிரஸ்தேதாராக இருந்தவரும் கௌரவம் மிக்கவருமாகிய வேங்கடசாமி நாயுடு என்பவரும், வேறு சில கனவான்களும் மறு நாட் காலையில் வந்து விமரிசையுடன் தேசிகரை அழைத்துச்சென்றனர். வையையின் தென்கரையில் தேசிகர் தங்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த ஒரு சத்திரத்தில் அவர் இறங்கினார். அதனைச் சுற்றி வெகு தூரம் வரையில் கொட்டகைகளும் பந்தல்களும் போட்டு அலங்கரிக்கப் பெற்றிருந்தன.

ஆயிரக்கணக்கான பேர்கள் உண்ணுவதற்குப் போதுமான அரிசி முதலிய பொருள்கள் திருவாவடுதுறையிலிருந்து வண்டி வண்டியாக வந்து குவிந்தன. வையையின் இரு கரைகளிலும் நெருக்கமாக உள்ள தென்னஞ்சோலைகளும் அந்நதியில் விசாலமான மணற்பரப்பும் நீரோட்டமும் கண்களைக் கவர்ந்தன.

கனவான்களின் வருகை

அப்பொழுது அங்கே ஸ்மால்காஸ் கோர்ட்டு ஜட்ஜாக இருந்த ஸர். டி, முத்துசாமி ஐயர், ஜட்ஜ் முத்துசாமி செட்டியார், டிப்டி கலெக்டர் சூரிய மூர்த்தியா பிள்ளை, திருவனந்தபுரம் திவானாக இருந்த திருமங்கலம் முன்ஸீப் கிருஷ்ணஸாமி ராவ் முதலிய பிரபலஸ்தர்கள் தேசிகரால் அழைக்கப்பட்டு வந்து அவரோடு சல்லாபம் செய்து சென்றார்கள். முத்துசாமி ஐயருடைய புகழ் அப்பொழுதே ஓரளவு பரவியிருந்தது. அவரை நான் கண்டபோது அவரது ஆடம்பரமில்லாத தோற்றமும், மெல்லென்ற வார்த்தைகளும் எனக்கு வியப்பை உண்டாக்கின.

கல்லிடைக் குறிச்சியிலிருந்து சின்னப் பண்டார ஸந்நிதியாகிய ஸ்ரீ நமசிவாய தேசிகர் வந்து சேர்ந்தார். திருவையாற்றிலிருந்து மகா வைத்தியநாதையரும் அவர் தமையனாரும் வந்து தேசிகரோடு தங்கியிருந்தனர். தேசிகர் என்னை அவர்களிடம் ஒப்பித்து, “இவரைக் கவனித்துக் கொள்ளுங்கள். யாத்திரை முழுவதும்