பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நானே உதாரணம்

445

நம்முடன் இருக்கவேண்டும்” என்றார். அவர்களுடைய வரவினால் நானும் பெரு மகிழ்ச்சியை அடைந்தேன்.

கும்பாபிஷேகச் சிறப்பு

மகா கும்பாபிஷேகத்திற்காக வந்திருந்த ஜனக்கூட்டம் கணக்கில் அடங்காது. காசி முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள ஜமீன்தார்களும், மிட்டாதார்களும், தங்கள் தங்கள் பரிவாரங்களுடன் வந்து கூடியிருந்தனர். தமிழ்நாட்டின் பல பாகங்களில் உள்ள பிரபுக்களெல்லாம் அந்நகரத்தில் ஒருங்கே சேர்ந்திருந்தனர். அவர்களிற் பெரும்பாலோர் வந்து சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சென்றனர். அவர்கள் வரும்போதெல்லாம் உடனிருந்து பாடல் சொல்லும் வேலையில் நான் ஈடுபட்டிருந்தேன்.

கும்பாபிஷேகம் உரிய காலத்தில் மிக்க சிறப்போடு நடை பெற்றது. சுப்பிரமணிய தேசிகர் கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தார். நானும் சென்று தரிசித்தேன். அக்கூட்டத்தில் அவ்வாலயத்தின் உண்மை அழகைத் தெரிந்து மகிழச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அப்போது தான் முதன் முதலாக மணி ஐயரை நாங்கள் பார்த்தோம். தேசிகரும் அவரைச் சேர்ந்தவர்களும் சிரம மின்றிக் கும்பாபிஷேக தரிசனம் செய்வதற்கு அவர் உடனிருந்து உதவி புரிந்தார். அவரைக் கண்ட அந்தச் சில நிமிஷங்களில் அவருடைய சுறுசுறுப்பையும், உபகார சிந்தையையும், ஜனங்களுக்கு அவர்பால் இருந்த மதிப்பையும் நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

மணி ஐயர்

கும்பாபிஷேக தரிசனத்திற்குப் பின் தேசிகர் தம் விடுதிக்குச் சென்றார். மணி ஐயரைக் கண்டது முதல் அவரோடு சில நேரம் பேசி இன்புற வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. ஆதலால் தக்க மனிதரிடம், “தங்களைப் பார்த்துப் பேசிப் பழக வேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருக்கிறது. நாம் அங்கே வந்து பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு நிமிஷமும் தங்களைக் காண வேண்டுமென்ற ஞாபகத்தோடேயே இருக்கிறோம்” என்று சொல்லியனுப்பினார். அதைக் கேட்டவுடன் மணி ஐயர், “நமக்கும் அவர் களைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு ஒரு குறிப்பிட்ட வேளையில் வருவதாக முன்னமே தெரிவித்து அவ்வாறே தேசிகருடைய விடுதிக்கு வந்தார். அந்த மேதாவியைப் பார்க்க வேண்டுமென்றும், அவரது பேச்சைக் கேட்கவேண்டுமென்றும் எண்ணிப் பலர் கூடியிருந்தனர். தேசிகர் தக்க