பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

452

என் சரித்திரம்

சென்று தாமிரபர்ணியில் நீராடி ஸ்ரீ உலகம்மையையும் ஸ்ரீ கலியாண சுந்தரேசுவரரையும் தரிசித்து வருவார். அவருடன் நாங்களும் செல்வோம். பொதிய மலை அடிவாரத்தில் அமைந்த அந்த ஸ்தலத்தின் காட்சி மனோரம்மியமாக இருக்கும். பாறைகளினிடையே தத்தித் தவழ்ந்து வரும் அருவியின் அழகும் அதில் கொழுத்த பல நிறமுள்ள மீன்கள் பளிச்சுப் பளிச்சென்று மின்னி விளையாடும் தோற்றமும் மெல்லென்ற காற்றும் நம்மை மறக்கச் செய்யும். அங்கே யாரும் மீனைப் பிடிக்கக்கூடாது. அதனால் அங்குள்ள மீன்கள் சிறிதும் அச்சமின்றி நீராடுவோர்கள் மீது மோதி விளையாடும்.

பாபநாசம் கோயிலில் எண்ணெய்ச் சாதமென்ற ஒருவகைப் பிரசாதமும் அதற்கேற்ற துவையலும் நிவேதனம் செய்யப்படும். எங்கள் காலை நேர இளம் பசியைத் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு அப்பிரசாதத்தை எங்களுக்கு அளிக்கும்படி தேசிகர் ஏற்பாடு செய்திருந்தார். பொதிய மலையிலிருந்து வேகமாய் இறங்கி ஓடி வரும் தாமிரபர்ணியின் தெளிந்த நீரில் மீனினங்கள் எங்களைச் சுற்றிச் சுற்றி வர, அவைகளுண்ணும்படி அன்னத்தை இறைத்து நாங்கள் அப்பிரசாதத்தை உண்ணும்போது உண்டான இன்பத்துக்கு இணையாக எதைச் சொல்லலாமென்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அத்தியாயம்—75

இரண்டு புலவர்கள்

புபுலவர்கள் பலர் உள்ள புளியங்குடியென்னும் ஊரிலிருந்து இருவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க ஒரு நாள் செவந்திபுரத்திற்கு வந்தனர். அவர்களோடு வந்த கட்டைவண்டியில் பல ஓலைச் சுருணைகள் வந்திருந்தன. அவற்றையெல்லாம் திண்ணையில் இறக்கி வைத்தனர். அப்போது அத்திண்ணையிலிருந்து தேசிகர் எங்களுக்குப் பாடம் சொல்லி வந்தார்.

வந்தவர்களையும் அந்த ஏட்டுச் சுருணைகளையும் கண்டபோது, “இவர்கள் பெரிய வித்துவான்களாக இருக்க வேண்டும். இன்று பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்” என்ற நினைவு எனக்கு உண்டாயிற்று.

புதிய தேவாரப் பதிகம்

அவர்கள் பாத காணிக்கை வைத்துத் தேசிகரை வந்தனம் செய்தார்கள். அவர்களுள் ஒருவர் செல்வம் மிகுந்த கனவான்; மற்-