பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு புலவர்கள்

453

றொருவர் தெய்வப் புலவர் என்பவர். தெய்வப் புலவரென்னும் பெயர் திருவள்ளுவருக்கு உண்டென்பதை நான் அறிந்திருந்தேன். வேறு யாருக்கும் அப்பெயர் அமைந்ததாகக் கேட்டதில்லை. தெய்வ நாயகப் புலவரென்ற பெயரை அவர் அப்படிக் குறைத்து வைத்துக் கொண்டார்.

வண்டியில் வந்த ஏட்டுச் சுருணைகள் தேசிகர் முன்னிலையில் கொணர்ந்து வைக்கப்பட்டன. “இவை என்ன?” என்று அவர் கேட்டார்.

“எல்லாம் தேவாரப் பதிகம்” என்று புலவர் சொன்னார்.

“அப்படியா! புதிதாகப் பிரதி செய்தது போல் இருக்கிறதே. தேவாரந்தான் அச்சில் வந்துவிட்டதே. சிரமப்பட்டு ஏட்டில் பிரதி செய்ய வேண்டிய அவசியம் இல்லையே?”

“இந்தப் பதிகங்கள் வேறு” என்று தெய்வப் புலவர் கூறினார். பேசாமல் இருந்த கனவான் சிறிது நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“வேறு புதிய பதிகங்கள் எங்கே கிடைத்தன?” என்று ஆவலோடு தேசிகர் கேட்டார்.

நம்பியாண்டார் நம்பியின் உதவியால் அபயகுலசேகர மகாராஜா தேவாரத்தை வெளிப்படுத்திய வரலாற்றை நாங்கள் ஞாபகப்படுத்திக் கொண்டோம். எவ்வளவோ தேவாரப் பதிகங்கள் செல்லால் அரிக்கப்பட்டுப் போயினவென்று அவ்வரலாற்றால் அறிந்திருந்தோம். அப்படி மறைந்த பதிகங்களின் பிரதிகள் வேறு எங்கேனும் சேமிக்கப் பெற்றுக் கிடைத்திருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்குத் தோற்றியது. ஆனால் அடுத்த நிமிஷம் எங்கள் ஆவல் முழுதும் சிதறியது.

“எல்லாம் பிள்ளையவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களே” என்று புலவர் அக்கனவானைச் சுட்டிக் காட்டிக் கம்பீரமாகச் சொன்னார். அந்தப் பிள்ளையவர்கள் வாயையே திறக்கவில்லை. தம்முடைய முகக் குறிப்பினால் உத்ஸாகத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

புலவர் சொன்ன வார்த்தைகள் தேசிகரைத் திடுக்கிடச் செய்தன. அவர் சிறிது சிரித்தார். அந்தச் சிரிப்பிலே ஓரளவு கோபக் குறிப்பும் கலந்திருந்தது. ஆனால் அதை வெளிப்படையாக அவர் காட்டிக் கொள்ளவில்லை.