பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—77

சமயோசிதப் பாடல்கள்

திருவாவடுதுறையில் குமாரசாமித் தம்பிரான் சின்னக் காறுபாறாக இருந்து வந்தார். சுப்பிரமணிய தேசிகருடைய யாத்திரைக்காலத்தில் அவர் திருவாவடுதுறையில் சில சில சீர் திருத்தங்களைச் செய்தார். கோயில், மடம், நந்தவனங்கள் முதலியவற்றை மிகவும் நன்றாக விளங்கும்படி கவனித்து வந்தார்.

திருநெல்வேலியிலிருந்து நான் திருவாவடுதுறைக்கு வந்து சில வாரங்கள் தங்கியிருந்தேன். அக்காலத்தில் குமாரசாமித் தம்பிரானோடு தமிழ் விஷயமாகப் பேசி இன்புற்றேன். யாத்திரைக் காலத்திற் சந்தித்த புலவர்களைப்பற்றியும் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் அவரிடம் சொன்னேன்.

திருச்செந்தூரில் செய்து கொண்ட சங்கற்பத்தின்படியே தினந்தோறும் ஸ்ரீ கோமுத்தீசுவரர் விஷயமாக ஒவ்வொரு செய்யுள் இயற்றி வந்தேன். அவற்றைக் குமாரசாமித் தம்பிரான் கேட்டு மகிழ்வார். மற்றத் தம்பிரான்களும் கேட்டு மகிழ்வார்கள். சனி ஞாயிறுகளில் கும்பகோணத்திலிருந்து தியாகராச செட்டியார் வருவார். அவர் தங்கியிருக்கும் இரண்டு தினங்களும் தமிழைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்.

வினாச்செய்யுள்

குமாரசாமித் தம்பிரான் தெற்கு வீதியிலுள்ள குளக்கரையில் ஒரு கட்டிடம் கட்டுவிக்க எண்ணி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார். ஆழ்ந்த அஸ்திவாரம் போட்டு வேலைக்காரர்கள் வேலை செய்தார்கள். அதனைக் கவனிக்கும் பொருட்டு அங்கே தம்பிரான் சென்றபோது நானும் உடன் சென்றேன். அவ்விடத்தில் ஒரு கிழவன் நடைபெறும் வேலைகளை மேற்பார்வை யிட்டுக் கொண்டு நின்றான். அவன் எலும்புந்தோலுமாய், நிற்பதற்கே சக்தியில்லாமல் இருந்தான். அவனைப் பார்த்தால் அவன் உடம்பில் உயிர் உள்ளதோ இல்லையோ என்ற சந்தேகம் எழும். அவன் எப்படி அங்கே வேலை வாங்குவானென்று ஆச்சரியமடைந்தேன். திடீரென்று ஓர் அதட்டல் குரல் கேட்டது. அந்த உடம்பிலிருந்து அத்தொனி எழுந்ததென்பதை உணர்ந்தபோது எனக்குப் பிரமிப்பு உண்டாகி விட்டது. “இவனா அதட்டினான்!” என்ற சந்தேகத்தோடு மீட்டும் அவனைக் கவனித்தேன். முன் கேட்டதைவிட மிகவும் பலமான