பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயோசிதப் பாடல்கள்

463

அதட்டல் தொனி அவனிடமிருந்து எழுந்தது. தம்பிரானைப் பார்த்தேன். ஆச்சரியக் குறிப்போடு, “இவ்வுடலினின்று மொலி இங்கெழுவதென்னே!” என்று சொன்னேன். என் உள்ளம் செய்யுள் இயற்றுவதில் ஈடுபட்டிருந்தமையால் அந்தக் கேள்வியை ஒரு செய்யுளடியைப் போலவே அமைத்துக் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே “உருவுகண் டெள்ளாமை வேண்டும்” என்று பதில் சொன்னார். பிறகு, “உங்கள் கேள்வியை நான்காவது அடியாக வைத்து முன்னே மூன்றடிகளை அமைத்து ஒரு செய்யுளாகப் பூர்த்தி செய்து விடுங்கள்” என்றார். அப்படியே இயற்றிச் சொல்ல அவர் கேட்டு மகிழ்ந்தார்.

நின்றால் நடக்கும்

அப்போது மணி பதினொன்று ஆகிவிட்டது. நானும் அவரும் காவிரி ஸ்நானத்திற்குப் புறப்பட்டோம். போகும்பொழுது, “குளத்திலேயே ஸ்நானம் செய்திருக்கலாம். காவிரிக்குப் போனால் நேரமாகும். நான் நின்றுவிட்டால் வேலை நின்றுவிடுமே” என்று சொன்னார். “நீங்கள் நடந்தால் அது நின்றுவிடும்; அங்கே நின்றால் நடக்கும் போலிருக்கிறது” என்று சொல்லி, உடனே

“கன்றால்முன்விளவெறிந்தகண்ணன்மிகவஞ்சவரும்கடுவயின்று
மன்றாட லுவந்ததிருக் கோமுத்தி வாணர்பணி வழுவா தாற்றும்
குன்றாத புகழ்க்குமர சாமிமுனி வரன்மாடம் குயிற்ற வன்னான்
நின்றாலவ் வேலைநடந் திடுமனையா னடப்பினது நிற்குந் தானே”

என்ற செய்யுளையும் சொன்னேன். “இன்று என்ன கவி ஆவேசம் வந்து விட்டது போலிருக்கிறதே” என்று சொல்லித் தம்பிரான் அச் செய்யுளை மீட்டும் மீட்டும் சொல்லக் கேட்டு இன்புற்றார்.

ஊற்றுப் பாட்டு

அப்பால் காவிரிப் படித்துறையை அடைந்தோம். அங்கே தென்கரையில் மிக உயரமாக வளர்ந்து ஆற்றின் பக்கமாகச் சாய்ந்து நிழல் அளிக்கும் ஒரு மருத மரம் இருந்தது. அம்மரத்தடியில் மணற்பரப்பிலே அமர்ந்தோம் மத்தியான்ன வெயிலில் அம்மரத்து நிழல் இனிமையாக இருந்தது.

காவேரியில் நீரோட்டம் இல்லாமையால் ஸ்நானம் செய்யும் பொருட்டுத் தனித் தனியே ஊற்றுக்கள் போடப்பட்டிருந்தன. ஆதீனத் தலைவர் அமிழ்ந்து ஸ்நானம் செய்வதற்கு ஏற்றபடி ஓர் ஓடுகால் வெட்டப்பட்டு நாற்புறமும் வேலிகட்டி யிருந்தது. அதன் மேல்பால் தம்பிரான்களெல்லாம் ஸ்நானம் செய்வதற்காக