பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456

என் சரித்திரம்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு அவைகளை எடுத்துச் சென்று சாத்தச் செய்ய வேண்டுமென்று தம்பிரான் எண்ணினார். ஒரு நாள் பெரிய குடலை கட்டி மருவையும் மருக்கொழுந்தையும் எடுக்கச் செய்து அதில் வைத்துச் சில தம்பிரான்களையும் என்னையும் உடனழைத்துக் கொண்டு சிதம்பரத்தை நோக்கிப் புறப்பட்டார். பகல் பன்னிரண்டு மணிக்கு ரெயில் வண்டியிலேறிச் சென்றோம். ரெயில் வண்டி புதிதாக வந்த காலமாதலின் அதில் ஏறிச்செல்வது விநோதமாக இருந்தது. அதிகக் கூட்டமே இராது. வண்டிக்கு இரண்டு பேர்களுக்குமேல் இருப்பது அருமை. நாங்கள் சிறிதுநேரம் எங்கள் இஷ்டம்போல் தனித்தனி வண்டிகளில் ஏறிச் சிரமபரிகாரம் செய்து கொண்டோம். பிறகு ஒன்றாகக் கூடி ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். யாவரும் ஒன்றாகப் படித்தவர்களாதலால் வேடிக்கையாகப் பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். ரெயில் வண்டியில் பிரயாணம் செய்வதைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடல் செய்ய வேண்டுமென்று செய்யத் தொடங்கினோம். எல்லோரும் செய்யுள் இயற்றத் தெரிந்தவர்கள். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தை வைத்துப் பாடல் இயற்றிச் சொன்னார்கள் ஒரே பொருளைப் பற்றிய பல வகையான கருத்துக்களமைந்த பாடல்களாதலின் அவை ரஸமாக இருந்தன. நான் இரண்டு மூன்று செய்யுட்களை இயற்றிச் சொன்னேன். அவற்றில் ஒரு வெண்பாவின் முற்பகுதி மாத்திரம் இப்போது ஞாபகத்தில் இருக்கிறது.

“உன்னலாம் தூசும் உடுக்கலாம் நித்திரையும்
பண்ணலாம் நூல்கள் படிக்கலாம்...”

ஒரு கற்பனை

பிற்பகலில் சிதம்பரத்தை அடைந்து மாலைக் காலத்தில் ஆலயத்துக்குச் சென்று ஸ்ரீ நடராச மூர்த்தியைத் தரிசித்தோம். குமார சாமித் தம்பிரான் தாம் கொண்டு வந்திருந்த மருவையும், மருக் கொழுந்தையும் ஒரு தீக்ஷிதரிடம் அளித்து அலங்காரம் செய்யச் சொன்னார். அவர் நடராஜமூர்த்தியின் திருமேனி முழுவதும் அவற்றைக் கொண்டு அலங்கரித்துத் தீபாராதனை செய்தார். “இறைவன் திருமேனி முழுவதும் உமா தேவியார் கொண்டதுபோல் பச்சையாக இருக்கிறது” என்று சொல்லிக் குமாரசாமித் தம்பிரான் மகிழ்ந்தார். நான் அது சம்பந்தமாக ஒரு செய்யுளை இயற்றிக் கூறினேன். அலங்காரம் செய்த பத்திரத்தின் பெயராகிய மருவென்பதற்கு வாஸனை என்றும் ஒரு பொருள் உண்டு. அந்தச் சொல்லுக்குரிய இரு பொருளை வைத்து ஒரு கற்பனை செய்தேன். “சிதம்பர ஸ்தலத்தில் எழுந்தருளிய