பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இறைவன் ஆகாசமே திருமேனியாகவுடையவன். ஆகாசத்திற்கு ஒலி உரியதே ஒழிய மரு (மணம்) இல்லையென்று ஆன்றோர் கூறுவர். அவர்கள் நாணமுற ஸ்ரீ குமார சாமித் தம்பிரான் ஆகாச வடிவினராகிய சிவபெருமானுக்கு மருவை அளித்தார்” என்ற கருத்தை உடைய அச்செய்யுள் வருமாறு:

“திருவென்றும் நின்றொளிரும் துறைசையிற்சுப்
     பிரமணிய தேவற் கன்பிற்
பொருவென்று மின்றியொளி ருங்குமர
     சாமிமுனி புங்க வன்றான்
மருவென்றும் வெளிக்கிலையென் பார்நாணத்
     தில்லைவெளி மன்றில் மேனி
அருவென்று முருவென்றுஞ் சொலநடிப்பார்க்
     கின்றுமரு அளித்தான் மன்னோ”

[ பொரு - ஒப்பு. மரு - மணம். வெளிக்கு - ஆகாசத்திற்கு. இலை என்பார் - இல்லை என்கிற பூமியானது.]

இச்செய்யுளைக் கேட்ட தம்பிரான்களும் பிறரும், “கற்பனை நன்றாயிருக்கிறது” என்று சொன்னார்கள்.

“நீங்கள் நினையாமலே வேறு நயம் ஒன்று இந்தப் பாட்டில் அமைந்திருக்கிறது” என்று குமாரசாமித் தம்பிரான் சொல்லவே, “என்ன அது?” என்றேன்.

“மரு என்றும் வெளிக்கிலை என்பார் நாண என்பதற்கு, வாசனை எப்பொழுதும் ஆகாசத்துக்கு இல்லை என்று சொல்லுபவர்கள் நாணும்படி என்பதுதானே நீங்கள் நினைத்து அமைத்த பொருள்?”

“ஆம்.”

“வாஸனை ஆகாயத்திற்கு இல்லை, எனக்கே உண்டு என்று சொல்லிச் செருக்கடையும் பூமி நாணும்படி என்று வேறு பொருள் ஒன்றும் கொள்ளும்படி உங்கள் வாக்கு அமைந்திருக்கிறது. பிருதிவியின் குணம் கந்தமென்பது சாஸ்திரக் கருத்தல்லவா?” என்றார் அவர். அவர் கூறியதைக் கேட்டு யாவரும் மகிழ்ந்தோம்.

அத்தியாயம்—78

குறை நிவர்த்தி

திருவாவடுதுறையில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தேன். சுப்பிரமணிய தேசிகர் தாம் உத்தேசித்தபடியே திருப்பெருந்துறைக்கு