பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474

என் சரித்திரம்

ஸ்ரீ சிவசுப்பிரமணிய பிள்ளை என்பவர். இடையிடையே வந்தவர்களுடன் பேசுவது, அவர்கள் குறையைக் கேட்டு நீக்குவது முதலியவற்றிலும் தேசிகர் கவனம் செலுத்துவார். இவற்றால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் போசனம் செய்வது என்ற வரையறை அவருக்கு இல்லாமற் போயிற்று. தேக நலத்தைக் கவனியாமல் இப்படியிருந்தமையால் அஜீரணமும் இருமலும் அவருக்கு உண்டாயின. கண்களில் ஒளிக்குறைவு ஏற்பட்டது. ஒன்றையும் பாராட்டாமல் அவர் வழக்கம்போல எல்லா வேலைகளையும் கவனித்து வந்தார்.

வித்துவான் யாரேனும் வந்தால் கல்வி சம்பந்தமான பேச்சிலேயே பொழுது போகும். திராவிட மகாபாஷ்யம் முதலிய நூல்களிலிருந்து தேசிகர் செய்திகளை எடுத்துச் சொல்லுவார். அப்போது என்னை அந்நூற்பகுதிகளைப் படித்துக் காட்டச் சொல்லுவார். ஏட்டில் இன்ன பக்கத்தில் இன்ன விஷயம் உள்ளது என்று குறிப்பிடுவார். அப்போது எனக்கு மிக்க வியப்பு உண்டாகும். படித்துப் படித்து அவர் பழகியிருந்தமையால் பக்கம் முதற்கொண்டு தெளிவாக அவர் ஞாபகத்தில் இருந்தது. இத்தகைய நிலையில் நான் அதிக நேரம் தேசிகரோடு இருக்க நேர்ந்தது; அதனால் மிக்க திருப்தியடைந்தேன்.

மொழி பெயர்ப்பு

சில சமயங்களில் தேசிகர் சில கருத்துக்களைக் கூறி அவற்றை அமைத்துப் பாடல்கள் இயற்றும்படி எனக்குக் கட்டளையிடுவார். செய்யுட்களை நான் உடனே இயற்றிச் சொல்லிக் காட்டுவேன். வடமொழி வித்துவான் யாரேனும் வந்து பழைய சுலோகம் ஏதாவது சொல்வார். அது நல்ல சுவையுடையதாக இருந்தால் சுப்பிரமணிய தேசிகர் என்னைப் பார்ப்பார். அவர் குறிப்பையறிந்து நான் உடனே அதனைத் தமிழ்ச் செய்யுளாக மொழி பெயர்த்துக் கூறுவேன். வடமொழி வித்துவான் அதைக் கேட்டு மகிழ்வதோடு மடத்தின் பெருமையைப் பாராட்டிப் பேசுவார். சில நாட்களில் இரவு நான் வீட்டுக்குப் போகும்போது தேசிகர் சில சுலோகங்களையோ, புதிய விஷயங்களையோ சொல்லுவார். அவற்றை இரவில் தமிழ்ச் செய்யுளாக இயற்றி மறுநாட்காலையில் தேசிகரிடம் சொல்லி அவரை இன்புறுத்துவேன்.

போஜ சரித்திரம்

ஒரு நாள் வடமொழி வித்துவானொருவர் மடத்திற்கு வந்திருந்தார். அவர் போஜ சரித்திரத்திலிருந்து சில சுலோகங்களைச்