பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

476

என் சரித்திரம்

பாத்திரத்தில் ஜலம் எடுப்பேன்?” என்ற கருத்தமைந்தது அந்தச் சுலோகம். ஸம்ஸ்கிருத வித்துவான் சுலோகத்தைச் சொல்லிவிட்டு மிகவும் ரஸமாகப் பொருளை எடுத்துரைத்தார். சுப்பிரமணிய தேசிகர் கேட்டு மகிழ்ந்ததோடு என்னைப் பார்த்து, “எப்படியிருக்கிறது?” என்று வினவினார். நான் அவர் குறிப்பையறிந்து, “மிகவும் நன்றாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு உடனே அக்கருத்தை அமைத்துப் பின் வரும் செய்யுளை இயற்றிச் சொன்னேன்:—

“நேரார் பதத்துப் புனைவிலங் காலயம் நீங்கினநிற்
சேரா துலர்க்கருள் சாஸனத் தாற்செம்பு தீர்ந்தவென்றால்
ஏரார்நின் னாட்டிடைப் போஜவித் தோலன்றி யானிதமும்
நீரா தரத்தோ டெடுப்பமற் றியாது நிகழ்த்துவையே.”

[நேரார்—பகைவர். அயம்—இரும்பு. ஆதுலர்—இரப்பவர்கள், ஆதரம்—அன்பு. நிகழ்த்துவை—சொல்வாயாக.]

காற்றுக்கு விண்ணப்பம்

பின்பு ஒரு நாள் வித்துவானொருவர் தேசிகருடைய உதவியை நாடி வந்தார். அவர் பழைய சுலோகங்கள் பலவற்றைச் சொன்னார். எந்த வகையான ஆதரவுமற்ற ஒரு வித்துவான் ஒரு பிரபுவை நோக்கித் தம்மைப் பாதுகாக்க வேண்டுமென்பதைத் தெரிவிக்க எண்ணி அக்கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பாகப் புலப்படுத்தியதாக அமைந்த சுலோகங்கள் அவை. அவற்றுள் புயற்காற்றினால் கடலில் அலைப்புண்ட ஒரு கப்பலில் தத்தளிப்பவன் காற்றைப் பார்த்துச் சொல்வது போல அமைந்தது ஒரு சுலோகம். நான் அதனை மொழிபெயர்த்துச் சொன்னேன். அச் செய்யுள் வருமாறு:—

“மீகாமன் செயல்முறையும் பிறழ்ந்தது வீழ்ந்
தனதுடுப்பு மீன்றோன் றாமல்
ஆகாய மறைத்தபுயல் அம்புதியோ
கடக்கரிதால் அந்தோ மார்க்கம்
ஏகாத விதமலைக ளுடையதுநௌ
விதைக்கரைப்பால் ஏகச் செய்து
நீகாவ லதுகவிழிவ் விரண்டுமுன்றன்
கையனவாம் நிகழ்த்துங் காலே.”

[மீகாமன்—மாலுமி. மீன்—நக்ஷத்திரம். அம்புதி—கடல். நௌ—ஒருவகைத் தோணி. காலே—காற்றே.]