பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480

என்‌ சரித்திரம்‌

தேசிகர் : அதற்கென்ன? பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் வேலையை விடும்போது யோசித்துக் கொள்ளலாமே.

செட்டியார் : வேலையிலிருந்து நான் விலகிக் கொண்டேன். டாக்டருடைய ஸர்டிபிகேட்டும் கொடுத்தாயிற்று. இப்போது என் வேலையில் ஒருவரும் இல்லை.

எதிர்பாராத இந்தச் செய்தியைக் கேட்டுத் தேசிகர் திகைத்தார். நானும் பிரமித்தேன்.

தேசிகர் : இந்த விஷயத்தை நீங்கள் முன்பு தெரிவிக்கவில்லையே. நீங்கள் இன்னும் சில வருஷங்கள் வேலை பார்க்கக் கூடுமென்றல்லவோ எண்ணியிருந்தோம்?

செட்டியார் : வேலையிலிருந்து விலகிக்கொள்வதாக நான் ஒரு வாரத்துக்கு முன்பே எழுதிக் கொடுத்து விட்டேன். சாமிநாதையரை என் ஸ்தானத்தில் நியமிக்க வேண்டிய ஏற்பாடுகளையும் செய்திருக்கிறேன். இவரை அனுப்பி வேலை பார்க்கும்படி உத்தரவு கொடுக்க வேண்டும்.

தேசிகர் இரண்டு நிமிஷம் யோசித்தார். பிறகு, “இவர் இவ்விடம் இருப்பது மிகவும் உபயோகமாக இருக்கிறது. ஆதலால் இப்போது இவரை அனுப்ப முடியாது” என்றார்.

செட்டியார் மிக்க வருத்தத்தோடு, “ஸந்நிதானத்தில் அப்படி உத்தரவாகக் கூடாது. காலேஜ் பிரின்ஸிபால் கோபாலராவ் அவர்களிடம் நான் வாக்குக் கொடுத்து விட்டேன். வேறு சிலர் இந்த வேலைக்கு மிகவும் முயன்று வருகிறார்கள். இவருக்கே செய்விக்க வேண்டுமென்று சொல்லி ராயரவர்களுடைய வாக்குறுதியையும் பெற்று வந்திருக்கிறேன். இவரிடம் ஸந்நிதானத்துக்குள்ள பேரன்பை அறிந்து இது நல்ல வேலை என்ற ஞாபகத்தால் இந்த முயற்சியைச் செய்யலானேன். இதனால் எல்லோருக்கும் நன்மையும் புகழும் உண்டாகும்” என்றார்.

தேசிகர் இணங்கவில்லை. செட்டியார் மீட்டும் சில காரணங்களை எடுத்துச் சொல்லி என்னை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இரவு மணி ஏழுக்கு மேலாகிவிட்டதால் தேசிகர், “இருக்கட்டும்; அனுஷ்டானத்தை முடித்துக் கொண்டு நமசிவாய மூர்த்தியின் தீபாராதனை தரிசனத்துக்கு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு அனுஷ்டானம் செய்யப் போனார்.