பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய வாழ்வு

481

செட்டியார் கலக்கம்

செட்டியாரும் நானும் எழுந்து புறத்தே வந்தோம் வழியில் எதிர்ப்பட்ட குமாரசாமித் தம்பிரானைக் கண்டு செட்டியார் தாம் வந்த காரியத்தைத் தெரிவித்தார். அவர், “நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம் மடத்துக்கு மிக்க உதவியாக இருக்கும் இவர்களைப் பிரிவதற்கு ஸந்நிதானம் சம்மதிக்குமா? எனக்கும் உசிதமாகத் தோற்றவில்லை; மற்றவர்களும் அப்படியே கருதுவார்கள்” என்றார்.

“இந்தச் சங்கடத்துக்கு நான் என்ன செய்வேன்!” என்று முணு முணுத்துக் கொண்டே செட்டியார் அவரை விட்டு நடந்தார். பிறகு என்னைப் பார்த்து, “இவர்கள் வார்த்தைகளையெல்லாம் கவனிக்க வேண்டாம். பேசாமல் ‘போகிறேன்’ என்று சொல்லி விட்டு என்னுடன் வந்துவிடுங்கள். இந்த மடத்தில் ஆயுள் முழுவதும் உழைத்தாலும் உங்களுக்கு இந்த நிலையிலிருந்து சிறிதும் உயர்வு ஏற்படாது. இங்கே ஒரு வருஷத்திற் கிடைக்கும் ஐம்பது ரூபாயை அங்கே மாதந்தோறும் பெறலாமே? பொழுது விடிந்ததுமுதல் ராத்திரி பத்து மணி வரையில் இங்கே கத்திப் பாடம் சொல்ல வேண்டும். பிற வேலைகளையும் கவனிக்க வேண்டும். அங்கே தினந்தோறும் 4 மணி நேரத்துக்குமேல் வேலை இராது. வாரந்தோறும் இரண்டு நாள் விடுமுறை உண்டு” என்றார். அவர் பின்னும் பலவாறு இரண்டு இடங்களுக்குமுள்ள வித்தியாசத்தை எடுத்துச் சொன்னார். அவ்வளவையும் நான் காதில் வாங்கிக்கொள்ளாமல், “கும்பகோணத்தில் உள்ள சௌகரியங்களைப் பற்றித் தாங்கள் சொன்னதை நான் கவனித்தேன். இதைக் காட்டிலும் மேலான இடமொன்று இருப்பதாக இதுவரையில் எனக்குத் தோற்றவில்லை. ஒரு விதத்திலும் இங்கே குறைவில்லை. சம்பளம் சொற்பமென்று சொல்லக்கூடாது. எங்களுக்கு ஒருவிதத்திலும் கவலையில்லாமல் சந்நிதானம் பார்த்துக்கொள்ளுகிறது” என்று பதில் சொன்னேன். திருவாவடுதுறை மடத்தின் அன்னம் என் உடம்பில் எவ்வளவு ஊறியுள்ளதென்பதைச் செட்டியார் நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லை.

எனது நிலை

என் மனம் ஊசலாடிக் கொண்டிருந்தது. காலேஜ் உத்தியோகம் என் உள்ளத்தைக் கவர்ந்தது. ஆனால் திருவாவடுதுறை மடத்தில் உள்ளோரது அன்பு என்உயிரோடு இணைந்து நின்றது. சுப்பிரமணிய தேசிகர் என்னை அனுப்ப இணங்கவில்லையென்பதை அறிந்த போது என்பால் அவர் வைத்துள்ள அன்பை ஒருவாறு

என்-31