பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

494

என்‌ சரித்திரம்‌

இதனால் ஜேஷ்ட கனிஷ்ட முறை நம் இருவருக்கும் உண்டு. இந்த முறையால் நீங்கள் இதுவரை பார்த்து வந்த வேலையை எனக்குச் செய்விக்க வேண்டும். இந்தக் கருத்தை வைத்து ஐந்து நிமிஷங்களில் அறுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தமொன்று இயற்றிச் சொல்ல வேண்டும்” என்று சொன்னார்.

நான் சொன்ன பாடல்

எல்லோரும் மௌனமாக இருந்தார்கள். செட்டியார் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் கவலைக் குறி படர்ந்தது. நான் விஷயத்தை வாங்கிக் கொண்டு மனத்துக்குள் பாடலை அமைத்து வந்தேன். செட்டியார் என்மேல் வைத்த கண் வாங்கவில்லை. நான் பாடுவேனோ மாட்டேனோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது போலும் நான்கு நிமிஷங்கள் ஆயின. ஐந்தாவது நிமிஷத்தில்,

“வாய்ந்தபுகழ் படைத்திலங்கு மீனாட்சி
      சுந்தரநா வலவன் பாலே
ஏய்ந்ததமிழ் ஆய்ந்தமுறைக் கியைவுறநீ
      இதுகாறும் இனிதின் வேய
ஆய்ந்தவள நகர்க்குடந்தைக் காலேஜில்
      நின்னிடமெற் களித்தல் நன்றே
வேய்ந்ததமிழ் முதற்புலமைத் தியாகரா
      சம்பெயர்கொள் மேன்மை யோனே”

என்று கூறி முடித்ததுதான் தாமதம். செட்டியார் குதித்து எழுந்து, “என் வயிற்றில் பாலை வார்த்தீரையா!” என்று சொல்லிக் குதூகலம் அடைந்தார். மற்றவர்களும், “சபாஷ்” என்றனர்.

நான் பாட்டுக்குப் பொருள் சொன்னேன். செட்டியார், “அந்த ‘வாய்ந்த’ என்ற வார்த்தையைக் கண்டு சந்தோஷப்பட வேண்டும். இந்த அவசரத்தில் அந்தமாதிரி சொல்லுவதற்கு ஐயா அவர்களிடம் படித்துப் பழகினவர்களுக்குத்தான் தெரியும். தானே வந்து வாய்ந்த புகழைப் படைத்து விளங்குமென்று அர்த்தம்” என்று மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார்.

பொருள் கூறி முடிக்கையில் ‘தியாகராசப் பெயர் கொள் மேன்மையோனே’ என்பதற்கு உரை கூறிவிட்டு, “அந்தப் பெயருக்கு ஏற்றபடி எனக்கு வேலையை அளித்தால்தான் உங்கள் பெயர் நிலைக்கும்; இல்லாவிட்டால் நிலைக்காது” என்றேன்.

“இவ்வளவு விஷயங்களையும் பொருத்திச் சீக்கிரத்தில் அமைத்தது ஆச்சரியந்தான். நான் சொன்ன கருத்தை ‘ஏய்ந்த தமிழாய்ந்த