பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனக்கு உண்டான ஊக்கம்‌

507

பெரிய விஷயமாக இருந்தாலும் கல்விக்கு இடையூறு என்பதை அங்கே காண முடியாது. ஆகவே மடத்தில் மற்றக்காரியங்களில் ஈடுபட்டவர்களோடு கல்வி ஒன்றையே எண்ணி வாழ்ந்த எனக்கு எல்லாம் கல்வி மயமாக உள்ள காலேஜில் வரையறையான காலம், வரையறையான வேலை, வரையறையான பாடம் இவற்றின் துணையுடன் பாடம் சொல்வது விளையாட்டாகவே இருந்தது. விளையாட்டில் அதிக இன்பம் உண்டாவது இயல்புதானே?

திருவாவடுதுறைக்குச் சென்றது

இந்த இன்ப வாழ்வைப்பற்றி என் தாய் தந்தையருக்கும் சுப்பிரமணிய தேசிகருக்கும் சொல்ல வேண்டுமென்று நான் துடித்துக் கொண்டிருந்தேன். அந்த வாரம் வெள்ளிக்கிழமை காலேஜ் விட்டவுடனே போயிருப்பேன். அந்த வேளையில் புகை வண்டியில்லை. அதனால் மறுநாள் சனிக்கிழமை பகல் வண்டியில் புறப்பட்டுத் திருவாவடுதுறையை அடைந்து நேரே வீட்டிற்குச் சென்றேன். என்னுடைய வரவை எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். வீட்டு வாசலில் என் தாயார் ஒரு தாம்பாளத்தில் மஞ்சள் நீரை வைத்துக்கொண்டு காத்திருந்தார். என்னைக் கண்டவுடன் ஆரத்தி சுற்றி, “உள்ளே வா, அப்பா” என்று அன்புடன் அழைத்தார்.

என் தாய் தந்தையார் என்னை ஆயிரம் கேள்விகள் கேட்டனர். நான் பதில் சொன்னவாறே ஸ்நானத்தையும் போஜனத்தையும் முடித்துக் கொண்டேன். வேலையைப்பற்றி அவர்களுக்கு ஒருவாறு சொல்லிவிட்டு மடத்திற்கு விரைந்து சென்றேன். அப்பொழுது மிகுந்த முகமலர்ச்சியோடு சில அன்பர்களுடன் ஒடுக்கத்தில் ஆதீனத் தலைவர் வீற்றிருந்தார். நான் போய்க் கண்டேன். இருவருக்கும் உண்டான ஆனந்தம் இப்படியென்று எடுத்துச் சொல்வது அரிது.

தேசிகரது திருப்தி

“உம்மைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படியும் நீர் ஒரு தடையுமின்றி வேலையைப் பெற்றுக்கொள்வீரென்றும், உபாத்தியாயர்களும் பிள்ளைகளும் நீர் பாடம் சொல்வதில் சந்தோஷப்படுவார்களென்றும் நாம் எதிர்பார்த்ததுண்டு. அந்தப்படியே ஜயமடைந்து நல்ல பெயர் வாங்கி வந்ததைப்பற்றி மிக்க சந்தோஷம்” என்று அவர் சொல்லிய வார்த்தைகள் என் காதில் அமுதம்போல் விழுந்தன. ஒரு வார காலமாக அவரது இன்மொழிகளைக் கேளாமல் பசித்திருந்த என் செவிகள் திருப்தியடைந்தன.