பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

508

என்‌ சரித்திரம்‌

அந்த வார்த்தைகளினூடே ததும்பிய அன்பை மாந்தி நிறைந்த உள்ளத்தோடு இருந்த எனக்கு உடனே விடை சொல்ல இயலவில்லை. சில நிமிஷங்கள் கழித்து, “எல்லாம் ஸந்நிதானத்தின் பேரன்பே” என்று சொல்லிவிட்டு நான் இயற்றி வைத்திருந்த பின்வரும் செய்யுளைச் சொன்னேன்:-

“அற்றார்க்குத் தாயனைய துறைசையிற்சுப் பிரமணிய
     அமலன் றன்பால்
கற்றார்க்குக் குறையுளதோ மற்றவன்றன் திருமுகத்தைக்
     கண்ணிற் காணப்
பெற்றார்க்குத் துயருளதோ வுரைப்பமிக வினிக்குமவன்
     பெயரை வாயால்
சொற்றார்க்குத் துயருளதோ யிரும்புவியி னாவலர்காள்
     சொல்லுவீரே”

[சொற்றார்க்கு-சொல்லுபவர்களுக்கு.]

இச்செய்யுள் என் உள்ள மகிழ்ச்சியிலிருந்து எழுந்ததென்பதைத் தேசிகர் உணர்ந்து கொண்டார். பிறகு ஒவ்வொரு விஷயமாக விசாரித்து வந்தார். நான் சொல்லச் சொல்ல அவர் புதுமைகளைக் கேட்பவர்போல மகிழ்ச்சியடைந்தார்.

அன்பர்களது வியப்பு

சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் அங்கே தங்கித் தேசிகருடைய சல்லாபத்தில் ஒன்றியிருந்தேன். சின்னப் பண்டார ஸந்நிதியாகிய நமசிவாய தேசிகரிடமும் விஷயங்களைத் தெரிவித்தேன். மடத்தில் உள்ள அன்பர்கள் யாவரும் என்னைச் சுற்றிச் சூழ்ந்து ஆவலுடன் காலேஜ் விஷயங்களை விசாரித்தார்கள். காலேஜின் பெருமையையும், புறத் தோற்றத்தையும் அறிந்த அவர்கள் கோபாலராவின் பெருந்தன்மை, ஆசிரியர்களின் தகுதி, மாணாக்கர்களின் இயல்பு, வகுப்புக்களின் ஒழுங்கு, அங்குள்ள சௌகரியமான ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் கேட்டுக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். ஏதோ ஒரு புதிய தேசத்துக்குப் போய் வந்தவனிடம் புதுமைகளைத் தெரிந்து கொள்ளுவதில் ஜனங்கள் எவ்வளவு வேகமாக இருப்பார்களோ அப்படியே இருந்தார்கள் அவர்கள்.

இரண்டு தினங்கள் போனதே தெரியவில்லை. திங்கட்கிழமை விடிந்தவுடன் முதல் வண்டியில் ஏறிக் கும்பகோணம் போய்ச் சேர்ந்தேன்.