பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அத்தியாயம்—85

கோபாலராவின்‌ கருணை

திங்கட்கிழமை பாடம் சொன்னேன். செவ்வாய்க்கிழமை காலையில் இரண்டாவது மணி எப். ஏ. இரண்டாவது வகுப்பில் நாலடியார் பாடம் நடத்தத் தொடங்கினேன். அப்போது காலேஜைப் பார்க்க வந்த ஓர் உத்தியோகஸ்தருக்கு அங்கங்கே உள்ள வகுப்புக்களைக் காட்டிக் கொண்டு வந்த கோபால ராவ் நான் இருந்த அறைக்குள் அவருடன் வந்தார். அவர்களைக் கண்டவுடன் எழுந்த என்னைக் கோபாலராவ் கையமர்த்தி விட்டு இரண்டு நாற்காலிகளைக் கொணர்ந்து போடச் செய்து ஒன்றில் அவரை இருக்கச் சொல்லி மற்றொன்றில் தாம் அமர்ந்தார். அதைப் பார்த்தபோது அவர் நெடு நேரம் அவ்வகுப்பில் இருந்து பாடத்தைக் கவனிக்கக் கூடுமென்று தோற்றியது.

நான் பாடம் சொல்லத் தொடங்கினேன். கோபாலராவும் அவர் நண்பரும் கவனித்து வந்தனர்.

நான் அப்போது பாடம் சொல்லத் தொடங்கிய பாடல் மிகவும் ரஸமானது. “நமக்குச் சக்தி இருக்கும் பொழுதே தர்மத்தைப் பண்ண வேண்டும். பிறகு செய்யலாமென்று நினைத்தால் அதற்குக் காலம் வராமலே போய்விடும்” என்ற கருத்தையுடையது அது. அதன் உட்பொருளை விளக்குவதற்காக ஒரு கதையைச் சொன்னேன்.

நான் சொன்ன கதை

“ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நன்றாகச் சம்பாதித்தான். தனக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொண்டான். தர்மசிந்தனை மாத்திரம் அவனுக்கு உண்டாகவில்லை.

அவனுக்கு வயசு முதிர்ந்து வந்தது. அவனுடைய குமாரர்களெல்லாம் தலையெடுத்தார்கள். ஏதாவது கிடைத்த பொருளைப் பத்திரமாகச் சேமித்து வைக்க அந்தக் காலத்தில் தக்க வழி இல்லை. அதனால் அவன் தனக்குக் கிடைத்ததை ஒரு துணியில் முடிந்து எங்கேயாவது புதைத்து வைப்பான். சில காலத்துக்குப் பிறகு அந்தக் கிழவனுக்கு நோயுண்டாகி மரணாவஸ்தை ஏற்பட்டது. அப்பொழுது அவனால் பேச முடியவில்லை. அருகில் அவனுடைய பிள்ளைகளும் உறவினர்களும் கூடியிருந்தனர். ஒவ்வொருவரும் அவனுடைய கடைசி விருப்பத்தை நிறைவேற்ற