பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

510

என் சரித்திரம்

வேண்டுமென்ற எண்ணத்தினால், “என்ன வேண்டும்? என்ன வேண்டும்?” என்று கேட்கலாயினர்.

“கிழவன் யமனுடன் போராடிக் கொண்டிருந்த அந்தச் சமயத்தில் அவனுடைய நண்பனொருவன், கிழவன் பணத்தைத் தர்மத்தில் செலவிடாமலிருந்ததைக் கண்டித்துத் தர்மம் செய்ய வேண்டுமென்று இடித்துரைத்து வந்தான். அவன் வார்த்தைகளால் கிழவனுக்குத் தர்மம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது, தான் எங்கேயோ சுவரில் ஓரிடத்தில் புதைத்து வைத்திருந்த சிறு பொன் முடிப்பின் ஞாபகம் அவனுக்கு வந்தது. அதை எடுத்துத் தக்கபடி தருமம் செய்ய வேண்டுமென்ற கருத்திருந்தும், அப்படிச் செய்யும் நிலையில் அவன் அப்போது இல்லை. தனது எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் அவன் வாய் அடைத்து விட்டது. அந்தச் சமயத்தில் வேறு என்ன செய்ய முடியும்? எப்படியாவது தன் கருத்தை மற்றவர்களுக்குத் தெரிவித்துவிட வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு அதிகரித்து வந்தது. மிகவும் கஷ்டப்பட்டு ‘இவ்வளவு பெரிய பொன் முடிச்சு’ என்பதைத் தெரிவிப்பதற்காக தன் கையினால் சுவரைக்குறிப்பிட்டு ஜாடை காட்டினான். ஆனாலும் பக்கத்தில் இருந்தவர்களுக்கு அவன் கருத்து விளங்கவே இல்லை. ‘ஐயோ! எதையோ கேட்கிறாரே! இந்தச் சமயத்தில் இன்னது கேட்கிறாரென்று தெரிந்துகொள்ள முடியவில்லையே!’ என்று சிலர் இரங்கி அழுதனர். அப்போது அவனுடைய குமாரன் ஒருவன், ‘தெரிந்து விட்டது; இவருக்குப் புளிப்பு விளாங்காயின்மேல் மிக்க பிரியம் உண்டு; அதைக் கேட்கிறார். ஐயோ, இப்போது அது கிடைக்கும் காலமல்லவே. ஆனாலும் பார்க்கிறேன்” என்று வேகமாக ஓடினான். அவன் போய் வருவதற்குள் கிழவன் உயிர் போய்விட்டது.

“பிள்ளை, ‘ஐயோ; அவருக்குப் பிரியமான விளாங்காய் வேண்டுமென்று ஜாடையாகச் சொன்னாரே நான் தெரிந்து கொண்டும் அதைக் கொண்டு வந்து கொடுக்கும் பாக்கியம் இல்லாத பாவியானேனே!’ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதான்.

“அந்தக் கிழவன் நினைத்ததற்கும் அவன் பிள்ளை செய்ததற்கும் சம்பந்தமே இல்லை. அவன் பொன்னைக் குறிக்கப்போய் அது புளி விளாங்காயாய் முடிந்தது.”

ராயர் சிரிப்பு

இந்தக் கதையை வேடிக்கையாக விரித்துச் சொல்லி நிறுத்தினவுடன் கோபால ராவ் பக்கென்று வாய்விட்டுச் சிரித்து விட்டார்.