பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோபால்‌ ராவின்‌ கருணை

311

அவ்வளவு வெளிப்படையாக அவர் சிரித்ததை யாரும் கண்டதில்லை. நான் சொன்ன கதையின் சுவைதான் அவரைச் சிரிக்க வைத்ததென்று அறிந்து திருப்தியடைந்தேன்.

மேலே பாடம் சொல்லத் தொடங்கினேன். “இப்படிக் கடைசிக் காலத்தில் தர்மம் செய்ய எண்ணியவர்கள் எண்ணம் அப்பொழுதுகூட நிறைவேறுவதில்லை. ஆகையால் நாம் போகும் மார்க்கத்திற்குப் பயன்படும் தர்மத்தை முன்பே செய்ய வேண்டும். பெரிய பிரயாணம் செய்யப் போகிறவன் சோற்று மூட்டை கொண்டு போவதுபோல இந்தத் தர்ம மூட்டையை நாம் மறுமைக்குச் சேகரிக்க வேண்டும். இதைத்தான் இந்தச் செய்யுள் சொல்லுகிறது” என்று சொல்லி மீண்டும் அப்பாட்டைச் சொன்னேன்:-

“சிறுகாலை யேதமக்குச் செல்வுழி வல்சி
இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார்—இறுகிறுகிப்
பின்னறிவா மென்றிருக்கும் பேதையார் கைகாட்டும் பொன்னும் புளிவிளாங்காயாம்.”

[சிறு காலை - இளம் பருவத்திலே. செல்வுழி - செல்லுமிடமாகிய மறு பிறப்பிற்குரிய. வல்சி - ஆகாரம். இறுகிறுக - இறுக இறுக. தோட் கோப்பு - தோளில் மாட்டிக் கொள்ளப்படும் உணவு மூட்டை. பின் அறிவாம் - பிறகு பார்த்துக் கொள்வோம்.]

அந்தப் பாட்டுக்கு விரிவாகப் பொருள் சொல்லி முடிந்தவுடன் மேலுள்ள பாடலைச் சொல்லத் தொடங்கினேன். அந்த வகுப்பில் மூன்றாவது மணிக்குரிய பாடம் சொல்லும் ஆசிரியர் அன்று வரவில்லை. அதனால் அந்த மணியிலும் தொடர்ந்து நானே தமிழ்ப் பாடம் சொல்லத் தொடங்கினேன். இரண்டு மணியிலும் கோபால ராவும் அவர் நண்பரும் அவ்வகுப்பில் இருந்து கேட்டனர்.

மணி முடிந்தது. அவர்கள் எழுந்தனர். கோபால ராவ் என்னை ஒரு முறை பார்த்துப் புன் முறுவல் பூத்தார். அவர் பார்வையில் கருணை ததும்பியது; முறுவலில் உவகை வெளிப்பட்டது.

நான் விடைபெற்றுக் கொண்டு இடைவேளை உணவு கொள்ளப் புறப்பட்டேன்.

செட்டியாரின் ஆவல்

அன்றுமாலை வழக்கம்போல் தியாகராசசெட்டியாரிடம் போய்க் கோபால ராவ் என் வகுப்புக்கு வந்ததையும் அங்கே நிகழ்ந்தவற்றையும் எடுத்துச் சொன்னேன்.