பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

512

என்‌ சரித்திரம்‌

செட்டியார், “அவருக்கு என்ன அபிப்பிராயம் உண்டாயிற்று என்று தெரியுமா? மேலதிகாரிகளுக்கு உங்களைப்பற்றி எழுத வேண்டுமே; என்ன எழுதப் போகிறாரோ!” என்று கேட்டார்.

“நான் எப்படி அறிவேன்?” என்று கூறினேன். செட்டியாருக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. என்னைப் பற்றிக் கோபால ராவ் மேலதிகாரிகளுக்கு எழுதி நியமன உத்தரவு பெற வேண்டும் என்ற கவலையால் ராயரவர்களுடைய மனத்தில் ஏற்பட்ட அபிப்பிராயத்தைத்தெரிந்து கொள்ளுதற்கு மிக்க ஆவலுடையவராக இருந்தார். எல்லாம் நல்லதாகவே இருக்குமென்று எதிர்பார்த்த எனக்கு அவருடைய ஆவல் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

மறுநாள் காலேஜ் திறந்தவுடன் செட்டியார் அங்கே சென்று ரைட்டரைப் பார்த்து, “சாமிநாதையரைப் பற்றி ராயரவர்களுக்கு என்ன அபிப்பிராயம்?” என்று கேட்டார்.

நல்ல செய்தி

அவர் நல்ல செய்தியைச் சொன்னார். “ராயரவர்கள் இவரைப் பற்றி டைரக்டருக்கு நன்றாக எழுதியிருக்கிறார்கள். இதோ தபால் அனுப்பப் போகிறேன்” என்று ரைட்டர் சொன்னதைக் கேட்ட பிறகுதான் தியாகராச செட்டியாருக்கு நல்லுணர்வு வந்தது. அவர் ரைட்டரை அதோடு விடவில்லை. என்ன எழுதினாரோ வென்று தூண்டித் தூண்டி விசாரித்தார். நான் மடத்திலிருந்து கல்வி கற்றுத் தேர்ச்சி பெற்றவனென்பதையும், அங்கே பலருக்குப் பாடம் சொல்லிப் பழக்கமானவனென்பதையும் எழுதிவிட்டு. “நானே இரண்டு முறை அவர் பாடம் சொன்ன வகுப்புக்குப் போய்க் கவனித்தேன். அவர் கற்பிக்கும் முறை மிகவும் திருப்தியாக இருக்கிறது, ஆகையால் இது வரையில் தியாகராச செட்டியாருக்குக் கொடுத்த ஐம்பது ரூபாயையே அவருக்கும் கொடுத்து இரண்டு வருஷத்துக்கு ஸப்ரோட்டமாக நியமிக்கலாம்” என்றும் குறித்திருந்ததாக ரைட்டர் சொன்னார்.

இவ்வளவையும் கேட்டுக்கொண்டு வந்த செட்டியார் என்னிடம் “கவலை நீங்கியது. கடவுள் கிருபையால் நான் செய்த முயற்சி பலித்தது. இனி உங்கள் பாடு, உங்கள் மாணாக்கர்கள் பாடு” என்று சந்தோஷத்தோடு சொன்னார்.

“எல்லாம் உங்களுடைய பேரன்பினால் உண்டானவை” என்று என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொண்டேன்.