பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

514

என் சரித்திரம்

தாயார் கையிற் கொடுத்தேன். அவர் வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டார். வேறு யாரேனும் லக்ஷ ரூபாய் கொடுத்திருந்தாலும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம் உண்டாகியிராது. பிறகு என் தந்தையாரிடமும் சுப்பிரமணிய தேசிகரிடமும் கொடுத்து வாங்கிக் கொண்டேன். “பரம சாம்பவருடைய பிள்ளையாகிய உமக்கு இன்னும் அதிகச் சம்பளமும் உயர்ந்த பதவியும் கிடைக்க வேண்டும்” என்று தேசிகர் வாழ்த்தினார்.

அதுவரையில் கும்பகோணத்தில் நான் ஸ்ரீ சாது சேஷையரவர்கள் வீட்டிலேயே இருந்து போஜனம் செய்து வந்தேன். அந்த வாரம் என் தாய் தந்தையரை அழைத்துக் கொண்டு கும்பகோணம் சென்றேன். அங்கே சில மாத காலத்துக்குப் பக்தபுரியக்கிரகாரத்தில் ஒரு சிறிய வீடுபேசிக்கொண்டு அதில் குடியிருந்தோம்

பரீக்ஷையும் விடுமுறையும்

மார்ச்சு மாத இறுதியில் காலேஜ் பரீக்ஷை நடைபெற்றது. அக் காலத்தில் ஸர்வ கலாசாலைப் பரீக்ஷை டிசம்பர் மாதத்தில்தான் நடைபெற்று வந்தது. மார்ச்சு மாதப் பரீக்ஷைக்குத் தியாகராச செட்டியாருடைய உதவியால் வினாப்பத்திரம் சித்தம் செய்தேன். பரீக்ஷை முடிந்தபிறகு அவர் முன்னிலையில் விடைக் கடிதங்களைத் திருத்தி ‘மார்க்’குகளை வரிசைப்படுத்தி எழுதிப் பிரின்ஸிபாலிடம் சேர்ப்பித்தேன்.

கோடை விடுமுறை தொடங்கியது. அந்தச் சம்பளத்தையும் பெற்றுத் தாய் தந்தையரை அழைத்துக்கொண்டு திருவாவடுதுறைக்குச் சென்றேன். அக்காலத்தில் திருவாவடுதுறையில் எனக்குச் சீமந்தம் நடைபெற்றது. அதற்கு என் சம்பளப் பணம் உதவியது. சுப்பிரமணிய தேசிகர் செய்த உதவிகளுக்கும் கணக்கில்லை.

அத்தியாயம்—86

விடுமுறை நிகழ்ச்சிகள்

திருவாவடுதுறையில் நான் இருந்த காலங்களில் அருகிலுள்ள ஊர்களில் இருந்த செல்வர்கள் வீட்டுக் கலியாணங்களுக்கு மடத்தின் பிரதிநிதியாகச் சென்று வருவேன். கலியாண தம்பதி-