பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுமுறை நிகழ்ச்சிகள்‌

515

களுக்கு வழங்கும்படி ஆதீன கர்த்தர் ஆடை முதலியன அளிப்பார். நான் அவற்றைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ப்பித்து விட்டு வருவேன். காலேஜ் கோடை விடுமுறைக் காலத்தில் திருவாவடுதுறையில் நான் தங்கியிருந்தபோது இத்தகைய சந்தர்ப்பம் ஒன்று நேர்ந்தது. அந்த வருஷம் மே மாதத்தில் கும்பகோணம் காலேஜ் ஆசிரியர் ஸ்ரீ ஸாது சேஷையருடைய மூத்த குமாரிக்குக் கலியாணம் நடைபெற்றது. அதை மிக விமரிசையாக அவர் திருப்பாதிரிப்புலியூரில் நடத்தினார். சேஷையர் மிக்க செல்வாக்குடையவராதலால் ஜட்ஜுகள், ஜில்லா முன்சீபுகள், தாசில்தார்கள் முதலிய பிரபல உத்தியோகஸ்தர்களும், பிரபுக்களும், பலவகையான வித்துவான்களும், பல கலாசாலை ஆசிரியர்களும் வந்து கூடினர். பதினாயிரம் ரூபாய்க்குமேல் செலவாயிற்று. அக்காலத்தில் அவ்வளவு தொகை செலவாயிற்று என்றால் கல்யாணம் எவ்வளவு சிறப்பாக நடந்திருக்க வேண்டுமென்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

சேஷையர் வீட்டுக் கலியாணம்

கும்பகோணம் காலேஜ் ஆசிரியர்கள் யாவரும் கலியாணத்துக்குப் போயிருந்தனர். நானும் ஆசிரியனென்ற முறையிலும் திருவாவடுதுறை மடத்தின் சார்பாகவும் போயிருந்தேன். அதற்கு முன் அவ்வளவு கூட்டமுள்ள விவாகத்தை நான் எங்கும் பார்த்ததே இல்லை. திருப்பாதிரிப்புலியூரில் ஒரு பெரிய உத்ஸவம் நடப்பது போல ஊர் முழுவதும் கல கலப்பாக இருந்தது. தக்க மனிதர்களெல்லாம் வந்திருக்கிறார்களென்று கேள்விப்பட்ட பலர் அவர்களைப் பார்ப்பதற்காகவே வந்து கூடினார்கள். சென்னையில் ஹை கோர்ட்டு ஜட்ஜாக இருந்த ஸர். டி. முத்துசாமி ஐயர் கலியாணம் விசாரிக்க வரப் போகிறாரென்ற பேச்சு வேறு இருந்தது. அந்தப் பெரியாருடைய புகழ் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்த காலம் அது. அவரைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் அங்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும் இருந்தது. கலியாணத்தின் ஐந்தாம் நாள் அவர் வருவதாகத் தெரிந்தது. அதனால் முன்பே விடைபெற்றுக் கொண்டு போவதாக உத்தேசித்திருந்த பலர் முத்துசாமி ஐயரைப் பார்ப்பதற்காகவே தங்கி விட்டனர்.

ஒரு கிழவர்

கலியாணத்தில் ஒரு நாள் மாலை நானும் ஆசிரியர்கள் சிலரும் கெடில நதியை நோக்கிப் புறப்பட்டோம். அப்போது எதிரே ஒரு முதிய பிராமணர் விபூதி ருத்திராக்ஷதாரியாக வந்து கொண்டிருந்தார். நாங்கள் ஒரு கூட்டமாய்ப் போய்க்கொண்டிருந்ததைப்