பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் தந்தையார் குருகுல வாசம்

31

கனம் கிருஷ்ணையருக்கு வரவர என் தந்தையாரிடத்தில் அன்பு அதிகமாயிற்று. வேறு சிஷ்யர் சிலர் சில நாள் இருப்பினும் யாரும் அவரிடம் நிலையாக இருந்ததில்லை. அதனால் என் தந்தையாரிடத்தில் இருந்த அன்பு வன்மை பெற்றது. முதலில் உள்ளத்துள் இருந்த அது நாளடைவில் விரிந்து வெளிப்படலாயிற்று. அவர்தாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் தம் மாணாக்காரை அழைத்துச் சென்றார். ஜமீன்தாரிடத்திலும் அடிக்கடி அழைத்துச் சென்று பழக்கம் செய்து வைத்தார்.

ஜமீன்தாருக்கு என் தகப்பனாரிடத்தில் அன்பு உண்டாயிற்று; “வேங்கட சுப்பு” என்று பிரியமாக அழைத்துப் பேசி மகிழ்வார். பிறகு மாதச் சம்பளமும் அவருக்கு ஏற்படுத்தினார்.

கனம் கிருஷ்ணையர் வித்துவான்கள் கூடிய சபையில் பாடும் போது என் தந்தையாரையும் உடன் பாடச் சொல்வார். சில சந்தர்ப்பங்களில் அவரைத் தனியே பாடச் செய்து கேட்டு மகிழ்வார். இத்தகைய அன்புச் செயல்களால் என் தந்தையாருக்கு ஊக்கமும் சங்கீதத்தில் திறமையும் அதிகமாகிக் கொண்டே வந்தன.

என் பிதா அவர்கள் உடையார்பாளையம் சென்ற சில வருஷங்களுக்குப் பின் என் சிறிய தந்தையாராகிய சின்னசாமி ஐயரும் அங்கே சென்று கனம் கிருஷ்ணையரிடம் சங்கீத அப்பியாசம் செய்யத் தொடங்கினர்.

என் தந்தையாருக்குக் கலியாணம் செய்யும் பருவம் வந்தது. அக்காலத்தே இவ்விஷயத்தில் பிள்ளை வீட்டாருக்குத்தான் செலவு அதிகம். விவாகச் செலவிற்கும் கூறை முதலியவற்றிற்கும் ஆபரணங்களுக்கும் பிள்ளை வீட்டுக்காரர்களே பணம் கொடுப்பது வழக்கம்; ஒரு திருமாங்கலியம் மட்டும் பெண் வீட்டார் பெண்ணுக்குக் கொடுப்பார்கள். ஆதலின் கலியாண விஷயத்தில் இந்தக் காலத்தைப் போலப் பெண் வீட்டார் பொருளில்லையே என்ற கவலைகொள்ள மாட்டார்கள்.

தம்முடைய குமாரருக்கு விவாகம் செய்விக்க வேண்டுமென்னும் கவலை என் பாட்டியாருக்கு உண்டாயிற்று. பாட்டனார் தம்முடைய ஜீவனத்துக்குப் போதுமான வருவாயை மாத்திரம் சம்பாதித்து வந்தார். நிலங்களெல்லாம் போக்கியத்தில் இருந்தன. கடன் வாங்குவதற்கும் மார்க்கம் இல்லை. இந்த நிலையில் விவாகச் செலவுக்கு என்ன செய்வதென்ற யோசனை பாட்டனாருக்கும் பாட்டியாருக்கும் உண்டாயிற்று. “மாமாதான் வழிவிட வேண்டும். ஸாமி இப்போது நமக்குப் பிள்ளையாக இல்லை.