பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

என் சரித்திரம்

அவருக்குத்தான் பிள்ளையாக வாழ்ந்து வருகிறான். அவர் முயற்சி பண்ணினால் கலியாணம் நிறைவேறும்” என்று அவர் நினைத்தார்.

இடையிடையே என் தந்தையாரைப் பார்க்கும் வியாஜத்தால் என் பாட்டனாரும் பாட்டியாரும் உடையார்பாளையம் வந்து சில நாள் தங்கிவிட்டுச் செல்வது வழக்கம். அங்ஙனம் ஒரு முறை வந்திருந்தபோது என் பாட்டியாராகிய செல்லத்தம்மாள் தன் அருமை அம்மானிடம் தம் குமாரருடைய சங்கீதத் திறமையைப் பற்றி விசாரித்தார்.

கனம் கிருஷ்ணையர், “நல்லபிள்ளை; எல்லோருக்கும் பிரியமாக நடந்து கொள்ளுகிறான். எனக்கு எவ்வளவோ சகாயம் செய்து வருகிறான். ஜமீன்தாருக்கும் அவனிடம் பிரீதி உண்டு” என்றார்.

அதுதான் தம்முடைய விருப்பத்தை வெளியிடுவதற்கு ஏற்ற சமயமென்று துணிந்த செல்லத்தம்மாள், “எல்லாம் உங்கள் ஆசீர்வாத விசேஷந்தான். உத்தமதானபுரத்தில் இருந்தால் வீணாய்ப் போய்விடுவானென்று உங்களிடம் ஒப்பித்தேன். உங்களுடைய கிருபைதான் அவனுக்கு எல்லாப் பெருமையும் உண்டாவதற்குக் காரணம். நீங்கள் வைத்த மரம். எனக்கு ஒரு குறை மாத்திரம் இருக்கிறது” என்று பேச்சைத் தொடங்கினார்.

“என்ன குறை?”

“இவனுக்குக் கலியாண வயசாகி விட்டது. நல்ல இடத்திலே கலியாணம் ஆகவேண்டும். உங்களுடைய சம்பந்தத்தால் இவனுக்கு நல்ல யோக்கியதை உண்டாகியிருக்கிறது. ஆனாலும் இவனுடைய கலியாணச் செலவுக்கு வேண்டிய பணம் எங்களிடம் இல்லை. நாங்கள் இவனைப் பெற்றதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. எல்லாப் பொறுப்பையும் நீங்களே வகித்துக்கொண்டீர்கள். உங்களுடைய கிருபையால் இவனுக்குக் கலியாணமாக வேண்டும்.”

“அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? ஈசுவர கிருபை எல்லாவற்றையும் நடத்தும்” என்றார் கிருஷ்ணையர்.

இந்த வார்த்தை என் பாட்டியார் காதில் அமிர்தம்போல் விழுந்தது. தம் அம்மானது பெருந்தன்மையான குணத்தை உணர்ந்தவராதலின், “இவர் எப்படியாவது கலியாணத்தை நிறைவேற்றி வைப்பார்” என்ற தைரியம் அவருக்கு உண்டாயிற்று. அந்தத் தைரியத்தோடு அவர் உத்தமதானபுரத்துக்குத் திரும்பிச் சென்றார்.