பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுமுறை நிகழ்ச்சிகள்‌

517

யாண்டான் யார்? உங்கள் பள்ளிக்கூடத்தில் வாசிக்கிறானா?” என்று கேட்டார்.

“இவரும் ஓர் உபாத்தியாயர்.”

அவருக்கு எல்லாவற்றையும் மிஞ்சிய ஆச்சரியம் உண்டாயிற்று.

“என்ன! இந்தச் சிறு பிள்ளையா வாத்தியார்! என்ன சம்பளம்?”

“ஐம்பது ரூபாய்” என்று அழுத்தமான தொனியோடு நாராயணசாமி ஐயர் சொன்னார்.

“அப்படியா? எல்லாம் தெய்வத்தின் கிருபை,,,,,என்னவோ சொல்ல வந்தேனே” என்று மறுபடியும் விட்ட இடத்தைத் தொட்டுக்கொண்டார் கிழவர்.

“இந்தமாதிரி சம்பளம் கிடைக்கிறதே; எல்லாம் ஈசுவரன் கொடுத்தது என்று தெரிந்துகொண்டு தெய்வ பக்தி பண்ணுகிறார்களா? அதுதான் இல்லை அனுஷ்டானம் செய்கிறார்களா? அதேது? வெள்ளைக்காரர்களிடம் சம்பளம் வாங்கினால் இவர்களும் தங்களை வெள்ளைக்காரர்களாக எண்ணிக் கொள்ளுகிறார்கள்.”

“எங்களைக்கூட அந்த வர்க்கத்தில் சேர்த்து விட்டீர்களோ! நாங்கள் இப்போது கெடிலத்திற்குத்தான் போகிறோம்” என்று சிரித்துக்கொண்டே நாராயணசாமி ஐயர் சொன்னார்.

“ஓகோ, சந்தியாவந்தனம் பண்ணப் போகிறீர்களா? நல்லதுதான். என்ன இருந்தாலும் நம் தேசத்துப் பழக்க வழக்கங்களே நமக்கு மேன்மையானவை. அவைகளைப் பாதுகாக்க வேண்டியது நமது தர்மம்.”

இவ்வாறு உபதேசம் செய்து விட்டு எங்கள் சந்தியாவந்தனந்திற்கு அகாலமாகி விடுமென்ற பயத்தால் அந்தக் கிழவர் விடை பெற்றுக்கொண்டு சென்றார். எனக்கு அவர் கூறிய வார்த்தைகள் இனிமையாக இருந்தன. தெய்வ பக்தியும் மதாசாரங்களைத் தவறாமல் அனுஷ்டிக்கும் இயல்பும் உடையவர்களோடே பழகி வந்த எனக்கு அந்தக் கிழவருடைய உபதேசம் மதிப்புடையதாகவே தோற்றியது.

ஜட்ஜ் முத்துசாமி ஐயர்

கலியாணத்தின் ஐந்தாம் நாள் பிற்பகல் இரண்டு மணிக்கு முத்துசாமி ஐயர் சென்னையிலிருந்து திருப்பாதிரிப்புலியூருக்கு வந்தார். ஸாது சேஷையர் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று