பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

518

என்‌ சரித்திரம்‌

அவரை வரவேற்றுத் தம் வீட்டுக்கு அழைத்து வந்தார். முத்துசாமி ஐயர் வந்து கலியாணத்திற்காகப் போட்டிருந்த பெரிய பந்தலின் நடுவே ஒரு பெரிய நாற்காலியில் அமர்ந்தார். அவருக்கு அருகில் சேஷையரும் வேறு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

ஊர் முழுவதும் பந்தலிலும் பந்தலைச் சுற்றிலும் கூடி விட்டது. அவ்வளவு கூட்டம் இருந்தாலும் எல்லோரும் அமைதியாக இருந்தனர். படாடோபமற்ற முத்துசாமி ஐயர் தோற்றத்தில் ஒருவகையான கவர்ச்சி இருந்தது. வெள்ளைத் தலைப்பாகை, நெடுஞ்சட்டை, ஐயம்பேட்டைப் பட்டுருமாலை. தூய வெள்ளை வஸ்திரம், காலில் ‘பாபாஸ் ஜோடு’- இவைகளே அவர் அணிந்திருந்தார். கையில் ஒரு பிரம்பு வைத்திருந்தார். இந்தியர்களுக்குக் கிடைக்காத உயர்ந்த பதவியிலே இருந்த அவருடைய ஆங்கிலப் பயிற்சியும், மேதையும், சட்ட ஞானமும் உலகம் அறிந்தவை. அவர் வெள்ளைக்காரர் சம்பளத்தைப் பெறுவது மட்டுமன்றி வெள்ளைக் காரரோடு நெருங்கிப் பழகுபவர். ஆனாலும், அவர் தோற்றத்திலும் பேச்சிலும் பழக்க வழக்கங்களிலும் ஆசாரத்திலும் ஹிந்துவாகவே இருந்தார். அவருடைய நெற்றியில் விளங்கிய விபூதியும் சந்தனமும் இடையிலிருந்த பஞ்சகச்ச வேஷ்டியும் அவர் பேச்சில் தொனித்த அடக்கமும் அவருடைய பெருமைக்குப் பின்னும் பெருமையையே உண்டாக்கின. முதல் நாள் மாலையில் எங்களோடு பேசிய கிழவர் சொன்ன வார்த்தைகள் எனக்கு ஞாபகத்துக்கு வந்தன. “அவர் முத்துசாமி ஐயரைக் கண்டால் எவ்வளவு சந்தோஷமடைவார்” என்று சிந்தித்தேன்.

முத்துசாமி ஐயர் பேசிக் கொண்டிருந்தபோது இடையே ஒரு திருக்குறளைச் சொன்னார். அவர் தமிழில் அன்புடையவரென்பதை அப்போது அறிந்து கொண்டேன். அவர் சுருக்கமாகப் பேசினார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திருக்குறளை உதாரணமாக எடுத்துச் சொன்னார். இவையாவும் என் மனத்தில் நன்றாகப் பதிந்தன. அவர் அன்று இரவு அங்கே விருந்துணவு உண்டு விடை பெற்று மாயூரம் சென்றார்.

கலியாணம் நிறைவேறியது. வந்திருந்தவர்கள் யாவரும் விடை பெற்றுச் சென்றனர். நான் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்து கலியாண விசேஷங்களையும், ஸர் டி. முத்துசாமி ஐயர் வந்து சென்ற வைபவத்தையும், அவரைப் பார்த்த சில மணிகளில் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டவற்றையும் சுப்பிரமணிய தேசிகர் முதலியவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தேன். அன்று முழுவதும் முத்துசாமி ஐயருடைய இளமைப் பருவம், அவர் படித்து