பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவலையற்ற வாழ்க்கை

523

புறப்படப் போகிறாரென்ற செய்தியை அறிந்து யாவரும் வருத்தமுற்றனர். அவருக்குத் தக்க உபசாரம் செய்து அனுப்ப வேண்டுமென்றும் ஞாபகார்த்தமாக நல்ல பொருள்களை வழங்க வேண்டுமென்றும் எண்ணினர். முடிவில் ஏறுமுக ருத்திராக்ஷ கண்டியொன்றையும், நல்ல சால்வை ஒன்றையும் கொடுப்பதாக அபிமானிகள் நிச்சயித்தனர். செட்டியார் புறப்படுவதற்கு முதல் நாள் மாலையில் கலியாணராமையர் தெருவில் உள்ள வக்கீல் டி.சுந்தரமையர் பங்களாவில் கோபாலராவ் தலைமையில் செட்டியாருக்கு உபசாரம் நடைபெற்றது. அநேகர் செட்டியாருடைய திறமைகளைப் பற்றிப் பேசினர். நான் அவர் விஷயமாகப் பத்துப் பாடல்கள் இயற்றிப் படித்து அவரைப் பாராட்டிப் பேசினேன். அப்பாடல்களில் ஒன்று வருமாறு:-

”வருந்தியருந் தமிழ்நமக்கு யார்புகல்வா ரென்றேங்கும்
     மனத்தி னோர்கள்
திருந்தியசெந் தமிழ்ச்செல்வன் தியாகரா சப்புலவர்
     திலகன் றன்பாற்
பொருந்தியவன் விளங்கவெடுத் துரைத்திடுநல் லுரைகளைத்தம்
     புந்தி வைப்பின்
மருந்தியலைந் தியலுணர்வார் கலிபுகல்வார் பிரசங்கம்
     வகுப்பார் மன்னோ.”

[புந்தி - அறிவில், ஐந்தியல்-ஐந்திலக்கணங்கள்.]

எல்லாம் நிறைவேறிய பிறகு செட்டியார் கோபாலராவை நோக்கி, “நாளைக் காலையில் நான் ஊருக்குப் புறப்படுகிறேன். விடையளிக்க வேண்டும். நான் சிபார்சு செய்தவர் திருப்தி உண்டாகும்படி நடந்து கொள்ளுகிறரா?” என்றார்.

ராயர் உடனே, “தாங்கள் சொல்லியபடி அவர் எல்லாவகையிலும் திருப்தியாகவே நடந்து கொள்ளுகிறார். பிள்ளைகளுக்கும் அவரிடம் மிக்க திருப்தி இருக்கிறது. இந்தச் சபையிலும் தம் திறமையை வெளிப்படுத்தி விட்டாரே” என்று சந்தோஷமாகச் சொன்னார். இந்த விஷயத்தைச் செட்டியார் அடிக்கடி விசாரித்துப் பலவாறாகத் தெரிந்து கொண்டிருந்தாலும் தாம் விடை பெறும் போது ராயருடைய வாயாலேயே ஒருமுறை கேட்டுவிட வேண்டுமென்று எண்ணியிருந்தார். ராயருடைய வார்த்தைகளைக் கேட்டவுடன் செட்டியார் முக மலர்ச்சியோடு என்னைப் பார்த்தார் நாணத்தால் நான் முகங் கவிழ்ந்தேன்.

கூட்டங் கலைந்த பின் செட்டியாரோடு அவர் வீடு சென்றேன். அவர் மறுநாள் ஊருக்குப் புறப்படுவாரென்பதை நினைத்தபோது