பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

522

என்‌ சரித்திரம்‌

களுக்கு ஸ்ரீ தி.கோ.நாராயணசாமி பிள்ளை என்பவர் தமிழ்ப் பாடம் சொல்லி வந்தார்.

காலேஜ் வேலை தானாக என்னைத் தேடி வந்தாலும் அதனைப் பெறுவதற்குப் பலர் முயற்சி செய்தார்களென்ற செய்தியை நான் அறிந்த போதுதான் அவ்வேலையின் அருமை எனக்குப் புலப்பட்டது. பங்களூர்க் காலேஜில் தமிழ்ப் பண்டிதராக இருந்த நாராயணசாமி பிள்ளையும், இராமாயண வெண்பாவும் பல புராணங்களும் பாடிய தஞ்சைச் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரும், சேலம் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சரவணப் பிள்ளையும் அவ்விதம் முயன்றவர்களிற் சிலர். அவர்கள் கல்வியிலாகாத் தலைவருக்கு நேரே விண்ணப்பம் செய்து கொள்ள, அவற்றை அவர் கோபாலராவுக்கு அனுப்பி விட்டனர். “தக்கவர் கிடைத்து விட்டமையால் இந்த விண்ணப்பங்களைக் கவனிக்கக்கூட வில்லை” என்று ராயர் பதில் அனுப்பி விட்டதாகத் தெரிந்தது.

கோவிந்த பிள்ளையின் முயற்சி

நான் விடுமுறையில் திருவாவடுதுறைக்குச் சென்றிருந்தபோது திரிசிரபுரம் வித்துவானும் வித்வஜ்ஜன சேகரருமாகிய கோவிந்தபிள்ளை கும்பகோணத்திற்கு வந்தார். தியாகராச செட்டியார் வேலையினின்று விலகியதை மட்டும் அறிந்த அவர் கோபாலராவிடம் சென்று தம் குமாரருக்குக் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் வேலையைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். பிரின்ஸிபால், “வேறொருவரை நியமித்து விட்டோம்” என்று சொல்லவே, கோவிந்த பிள்ளை வேகமாக, “யார் அவர்?” என்று கேட்டார். நான் வேலைக்கு வந்திருப்பதாக அவர் சொல்லவே பிள்ளை, “அப்படியா மிகவும் சந்தோஷம். அவரை எனக்குத் தெரியும். நன்றாகப் படித்தவர்” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார்.

தியாகராச செட்டியாருக்கு பிரிவுபசாரம்

தியாகராச செட்டியார் வேலையை விட்டு நீங்கினாலும் பென்ஷன் விஷயமாகச் சில சிக்கல்கள் இருந்தமையால் அவற்றைக் கவனிப்பதற்காக ஆறு மாத காலம் வரையில் அவர் கும்பகோணத்திலேயே தங்கியிருந்தார். அப்பால் அவர் தம் ஊருக்குப் போக ஏற்பாடு செய்தார். பல வருஷங்கள் கும்பகோணத்திலிருந்து புகழ்பெற்ற அவருக்கு நகரத்தில் நண்பர்கள் பலர் இருந்தனர். காலேஜ் ஆசிரியர்களும் வேறு கமலசாலை ஆசிரியர்களும் அவரிடம் மிக்க மதிப்பு வைத்திருந்தனர். செட்டியார் கும்பகோணத்தை விட்டுப்