பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

536

என் சரித்திரம்

யாமையையுடையதென்ற விஷயத்தையே மிகுதியாகக் கேட்டுப் பழகியிருந்த எனக்கு இக்கருத்து, புதியதாக இருந்தது. மேலே படித்துக்கொண்டு போனேன். அந்த ஒரு பிரதியை மாத்திரம் வைத்துப் படிப்பது சிரமமாகவே தோற்றியது.

ஏட்டுப் பிரதி

அந்த வாரம் சனிக்கிழமை வழக்கம் போலவே திருவாவடுதுறைக்குப் போய் இராமசாமி முதலியாரைச் சந்தித்தது முதல் நிகழ்ந்தவற்றையெல்லாம் சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தேன். கேட்ட தேசிகர் மிகவும் மகிழ்ச்சியடைந்து. “தக்க அறிவுடைய கனவான்களது பழக்கம் ஏற்படுவது மிகவும் நல்லதுதான்; அவருக்கு ஜாக்கிரதையாகப் பாடம் சொல்ல வேண்டும்; பிள்ளையவர்கள் எழுதி வைத்த சிந்தாமணி ஏட்டுப் பிரதி ஒன்று மடத்தில் இருக்கிறது” என்று சொல்லி அப்பிரதியை வருவித்து அளித்தார். “முதலியாருக்குப் பாடம் சொல்லும்படியிருப்பதால் சனிக்கிழமை மட்டும் வந்து ஞாயிற்றுக்கிழமை திரும்பி விடலாம்” என்று கூறி விடை கொடுத்தார்.

கும்பகோணம் வந்து பிள்ளையவர்கள் பிரதியையும் முதலியார் தந்த பிரதியையும் வைத்துக்கொண்டு சிந்தாமணியைப் படித்தேன். முதலியார் பிரதியில் மூலமும் பொழிப்புரையுமே இருந்தன. முதலில் சில பாடல்களுக்கு மாத்திரம் விசேட உரை இருந்தது. பிள்ளையவர்கள் பிரதியிலோ முழுவதற்கும் விசேட உரை இருந்தது. ‘விசேட உரையை விட்டு விட்டுத் தனியே பொழிப்புரையை மாத்திரம் எழுதிக் கொள்வதில் என்ன லாபம்? இரண்டும் வேறு வேறு உரைகளோ’ என்ற சந்தேகம் உண்டாயிற்று. கவனித்துப் பார்க்கையில் இரண்டும் ஒருவரது உரையே என்று தெரிந்தது. ஆனாலும் ‘இருவேறு வகையாகப் பிரதிகள் இருப்பது ஏன்?’ என்ற ஐயம் விளங்கவில்லை.

தெரியாத விஷயங்கள்

அடுத்த நாள் இராமசுவாமி முதலியாரிடம் சென்று பாடம் சொல்லத் தொடங்கினேன். நாமகள் இலம்பகம் 1870-ஆம் வருஷம் பி. ஏ, பரீட்சைக்குப் பாடமாக இருத்நது. அப்போது படித்த முதலியார் தாம் பாடம் கேட்டபோது அறிந்த விஷயங்களை இடையிடையே சொன்னார். நான் பாடம் சொன்னபோது இடையில், ‘கட்டியக்காரன்’ பெயர் வந்தது. நான் அதை ஒருவருடைய பெயரென்று தெரிந்து கொள்ளவில்லை. ‘கட்டியக்காரன்’ என்று படித்தேன். அப்போது முதலியார், “நாமகள் இலம்பகக் கதை