பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன நண்பர்கள்

537

மாத்திரம் எனக்குத் தெரியும்; கட்டியங்காரன் என்பது தான் அந்தச் சொல்; சச்சந்தனுடைய மந்திரிகளுள் ஒருவன் பெயர் அது; அவன் தான் சச்சந்தனைக் கொன்றான்” என்றார். பிறகு, ‘கோவிந்தன்’ (சீவக சிந்தாமணி, 187, உரை) என்று ஒரு பெயர் வந்தது. அது கண்ணபிரானைக் குறிப்பதென்பதைத் தவிரச் சிந்தாமணியிலே யாரைக் குறிப்பதென்பது தெரியவில்லை. முதலியாருக்கும் அது விளங்கவில்லை. இப்படியே வேறு சில விஷயங்களும் விளங்காமலிருந்தன. எனக்கு விளங்காத விஷயங்களை விளங்கவில்லையென்று சொல்லித் தக்கவர்களைக் கேட்க வேண்டுமென்பேன். விளங்காததையும் விளங்கியதாகச் சொல்லிக் குழப்பாததை அறிந்த முதலியார் அதைப் பாராட்டுவார். நாங்கள் சிந்தாமணியைப் படித்து வந்தபோது சில வித்துவான்களும் வந்திருந்து கேட்பதுண்டு. இப்படி ஐந்து மாதங்கள் சென்றன.

சிந்தாமணி ஜைன நூலாதலின் விளங்காத விஷயங்களை ஜைனர்கள் மூலமாகத் தெரிந்து கொள்ளலாமென்று எண்ணி என்னிடம் வீட்டிற் பாடம் கேட்டு வந்த ராமலிங்க பண்டாரமென்பவரை நோக்கி, “இந்தப் பக்கத்தில் ஜைனர்கள் யாரேனும் இருக்கிறார்களா? படித்தவர்களாக யாரையாவது தெரியுமா?” என்று கேட்டேன்.

அவர், “இங்கே இராமசாமி கோவில் மேல் தெருவில் ஜைனர்கள் வீடுகள் உண்டு. எல்லோரும் செல்வர்களே, அவர்களுள் படித்தவர்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னதைக் கேட்டபோது உடனே போய் அவர்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினேன்.

சந்திரநாத செட்டியார்

மறுநாள் என் விருப்பத்தின்படி ராமலிங்க பண்டாரம் என்னை அழைத்துக் கொண்டு ஜைனர்கள் வசிக்கும் தெருவிற்குச் சென்றார். அங்கே தமக்குத் தெரிந்த சந்திரநாத செட்டியார் என்பவர் வீட்டினுள் என்னை அழைத்துப் போனார். அந்த வீட்டின் வாயிலில் மாக்கோலம் போடப்பட்டிருந்தது. நிலைகளில் மாவிலைத் தோரணம் கட்டி அலங்காரம் செய்திருந்தார்கள். ‘இன்றைக்கு ஏதோ விசேஷம் போலிருக்கிறது’ என்று எண்ணி உள்ளே சென்றோம். அங்கே கூடத்தில் பலர் கூடியிருந்தனர். அக்கூட்டத்திலிருந்த ஒரு கனவானைக் காட்டி, “இவர்களே சந்திரநாத செட்டியாரவர்கள்” என்று ராமலிங்க பண்டாரம் சொல்லி என்னையும் அவருக்குப் பழக்கம் பண்ணி வைத்தார்.

“வாழை, தோரணம் இவையெல்லாம் கட்டி அலங்காரம் செய்திருக்கிறதே; ஏதாவது விசேஷ முண்டோ?” என்று கேட்டேன்.