பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

538

என் சரித்திரம்

“இன்றைக்குச் சிந்தாமணி பூர்த்தியாயிற்று; அந்த விசேஷத்தைக் கொண்டாடுகிறோம்” என்று அவர் சொன்னார்.

எனக்கு மிக்க ஆச்சரியமுண்டாயிற்று. ‘நாம் சிந்தாமணியைப் பற்றித்தான் கேட்க வந்திருக்கிறோம். சிந்தாமணி பூர்த்தியாயிற்றென்று இவர் சொல்லுகிறார்; சிந்தாமணியைப் பாராயணம் செய்வது இவர்கள் சம்பிரதாயம் போலிருக்கிறது’ என்றெண்ணி, “சிந்தாமணியைப் படித்து வந்தீர்களா?” என்று கேட்டேன்.

“ஆமாம். நான் சிரவணம் செய்து வந்தேன். இவர்கள் பாடம் செய்து வந்தார்கள்” என்று சொல்லி எதிரே அமர்ந்திருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி, “திண்டிவனம் தாலூகாவிலுள்ள வீடூர் என்பது இவர்கள் கிராமம். தமிழிலும், வட மொழியிலும், பிராகிருதத்திலும் உள்ள ஜைன கிரந்தங்களிலும் உரைகளிலும் மிகுதியான பழக்கமுள்ளவர்கள். இவர்களைப் போன்றவர்கள் யாருமில்லை. இவர்கள் திரு நாமம்[1] அப்பாசாமி நயினாரென்பது” என்று தெரிவித்தார். எனக்காகவே அவர் அங்கே வந்திருப்பதாகத் தோற்றியது. ‘நாம் எந்த விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அந்த விஷயத்தில் தேர்ச்சியுள்ளவர்களை எதிர்பாராமலே பார்க்கிறோம். அதே விஷய சம்பந்தமான உத்ஸவம் வேறு நடக்கிறது. இது தெய்வச் செயலே’ என்று எண்ணிப் பூரிப்பை அடைந்தேன்.

“எவ்வளவு காலமாக இவர்கள் இங்கே இருக்கிறார்கள்?” என்று கேட்டேன்.

“ஆறு மாதமாக இந்தப் பாடம் நடந்து வருகிறது”

‘இந்த ஆறு மாதங்களை நாம் வீண்போக்கி விட்டோமே!’ என்ற வருத்தம் எனக்கு உண்டாயிற்று.

அந்தப் பெரியவர் மிக்க அடக்கமுடையவராகவும் மெல்ல வார்த்தை சொல்பவராகவும் இருந்தார். அவரிடம் நானும் சிந்தாமணியைப் படித்து வருவதைப் பற்றிச் சொன்னேன். “அதில் கோவிந்தனென்று வருகிறது; அது யாருடைய பெயர்?” என்று கேட்டேன்.

அவர் ஸாதாரணமாக, “விஜயையின் சகோதரன். விஜயை சச்சந்தனுடைய மனைவி” என்றார். வேறு சில ஐயங்களை


  1. கும்பகோணம் காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்து பென்ஷன் பெற்றுக் கொண்டுள்ள ஸ்ரீமான் ராவ்பகதூர் அ. சக்கரவர்த்தி நயினாரவர்களுடைய தந்தையார் இவர்.