பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

540

என்‌ சரித்திரம்‌

அதனால் அவர் தம்மை ஒரு ஜைனராகச் சொல்லிக்கொண்டு சிற்றாம்பூர் என்னும் இடத்திலுள்ள ஜைன மடத்திற்கு வந்து சில காலம் தங்கி ஜைன நூல்களையும் ஜைன சம்பிராதயங்களையும் கற்றுச் சென்று மீட்டும் புதிய உரையை எழுதினாராம். விசேஷ உரையுடன் இருக்கும் பிரதியிலுள்ளது பின்பெழுதிய உரையென்று தெரிய வந்தது.

இப்படி நூலாராய்ச்சியால் புலப்படாமல் கர்ண பரம்பரையாகக் கேட்டுத் தெரிந்த செய்திகளால் பல விஷயங்கள் எனக்கு விளங்கின. சிந்தாமணியின் நூலாசிரியராகிய திருத்தக்க தேவர் வரலாறு அவ்வாறுதான் எனக்குத் தெரிந்தது.

இராமசுவாமி முதலியார் பாடம் கேட்டு வந்தார். அங்கங்கே சிந்தாமணி நூலின் நயத்தையும் உரை நயத்தையும் அறிந்து அவர் பாராட்டுவார். கோவிந்தையாரிலம்பகத்தின் முதற் செய்யுளுரையில் “வீரன்றாணிழல்” என்பதற்குச் சமவசரணம் என்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அந்தத் தொடர் எதைக் குறிக்கிறதென்று எனக்கு விளங்கவில்லை. விளங்காவிட்டால் விடுவேனா? சந்திரநாத செட்டியாரிடம் போய்க் கேட்டேன். சமவசரண மென்பதுபெரிய ஜைனாலயமென்று தெரிய வந்தது. அதற்குப் பல அங்கங்கள் உண்டென்று சந்திரநாத செட்டியார் சொல்லி, “என் வீட்டிற்கு எதிரே குணபால செட்டியார் என்பவர் வீடு இருக்கிறது. அவ் வீட்டில் சமவசரணத்தின் படம் உண்டு. அதைப் பார்த்தால் அதன் விஷயம் நன்றாகத் தெரியும்” என்று சொன்னார்.

பவ்ய ஜீவன்[1]

அப்படியே அவ்வீடு சென்று குணபால செட்டியாரைக் கண்டு பேசினேன், அவர் சமவசரணத்தின் படத்தை எனக்குக் காட்டினார். அதிலிருந்து சமவசரணத்தின் உறுப்புக்கள் எனக்குத் தெளிவாகத் தெரிய வந்தன. குணபால செட்டியார் ஜைன சம்பிரதாயம் தெரிந்தவர். அவரை விட அதிகமாக அவர் மனைவியாருக்குத் தெரியும்.

நான் அவ்வீட்டுக்குப் போன அன்று சமவசரணப் படத்தைப் பார்த்ததோடு ஜைன சமய சம்பந்தமான சில விஷயங்களை விசாரித்தேன். அவர் தமக்குத் தெரிந்தவற்றைச் சொல்லிவிட்டு மற்ற விஷயங்களை விளக்குவதற்காகத் தம் மனைவியாரை அழைத்து


  1. இவ்விஷய விரிவை நான் எழுதி வெளியிட்டுள்ள நல்லுரைக் கோவை நாலாம் பாகத்தில் காணலாம்.