பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன நண்பர்கள்‌

541

வந்தார். அவர் ஜைன சமய விஷயங்களில் பெரிய நிபுணரான தரணி செட்டியார் என்பவருடைய சகோதரியார். அவர் மூலமாகச் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நான் கேட்கும் கேள்விகளிலிருந்து அப்பெண்மணியார் நான் ஜைன சமய நூல்களில் பயிற்சியுடையவனென்று எண்ணி, “இவர்கள் பவ்ய ஜீவன் போல் இருக்கிறதே” என்று தம் கணவரிடம் சொன்னார். பக்குவ ஆன்மாக்களைப் பவ்ய ஜீவனென்பது ஜைன சம்பிரதாயம். நச்சினார்க்கினியர் சிந்தாமணிக்கு ஜைனர்களுடைய சம்மதத்தைப் பெற்று உரை எழுதியபோது எவ்வளவு சந்தோஷத்தை அடைந்திருப்பாரோ அவ்வளவு சந்தோஷத்தை அப்போது நான் அடைந்தேன். ‘சிந்தாமணி ஆராய்ச்சிக்கு நீ தகுதியுடையவன்’ என்ற யோக்கியதா பத்திரத்தை அந்த ஜைன விதுஷி அளித்ததாகவே நான் எண்ணினேன்.

சமுத்திர விஜயம் செட்டியார்

இந்த ஜைன நண்பர்களோடு அதே தெருவில் இருந்தவரும் மிக்க செல்வரும், தரணி செட்டியாருடைய மருகருமாகிய சமுத்திர விஜயம் செட்டியாருடைய பழக்கமும் எனக்கு உண்டாயிற்று. அவருடைய துணையினால் எனக்குச் சில ஜைன நூல்கள் இரவலாகக் கிடைத்தன.

நச்சினார்க்கினியர் உரை

இவ்வாறு ஜைனர்களுடனும் ஜைன நூல்களுடனும் இடைவிடாது பழகியபோது சிந்தாமணியின் அருமை வர வர எனக்கு நன்கு புலப்படலாயிற்று. செந்தமிழ்க் காவியங்களுக்கெல்லாம் அதுவே உரையாணி என்பதை அறிந்து கொண்டேன். அதனுடைய போக்கிலே உள்ள கம்பீரமும் சொல்லாட்சிச் சிறப்பும் என் மனத்தைக் கவர்ந்தன.

நச்சினார்க்கினியர் உரையினால் புதிய புதிய விஷயங்களை உணர்ந்தேன். இரண்டு விஷயங்களில் அவரிடம் சிறிது வருத்தம் உண்டாயிற்று. பல இடங்களில் மாறிக் கூட்டிப் பொருள் விளக்குகிறார். ஓரிடத்திலுள்ள பாட்டிலிருக்கும் சொல்லைப் பல பாட்டுக்கு முன்னே மற்றோரிடத்திலுள்ளதோடு இணைத்து மாட்டெறிகின்றார். அத்தகைய இடங்களில் அவர் உரையில் சிறிது வெறுப்புத் தட்டியது. ஒரு விஷயத்துக்கோ சொற்பிரயோகத்துக்கோ ஒரு நூற் செய்யுட் பகுதியை மேற்கோள் காட்டுமிடத்தில் அந்த நூற் பெயரைச் சொல்வதில்லை. ‘என்றார் பிறரும்’ என்று எழுதி