பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டுக்கு வந்தார்; “சிந்தாமணியின் பெருமையை நீங்கள் இப்போது நன்றாக உணர்ந்திருக்கிறீர்கள். இந்த அருமையான காவியம் படிப்பாரற்று வீணாகப் போகாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும், இன்னும் சில பிரதிகள் சம்பாதித்து நீங்களே அச்சிட்டு வெளிப்படுத்த வேண்டும். அதைப் போன்ற உபகாரம் வேறு ஒன்றும் இல்லை” என்று சொன்னார். நான், “என்னால் இயன்ற அளவு முயன்று அப்படியே செய்கிறேன்” என்று வாக்களித்தேன். அவர் விடை பெற்றுச் சென்றார்.

அத்தியாயம்—90

அன்பர் பழக்கமும் ஆராய்ச்சியும்

கும்பகோணம் பெரிய நகரமாக இருந்தும், கனவான்கள் மாலை நேரங்களில் கூடிப் பழகிப் பேசுவதற்குத் தக்க பொதுவிட மொன்று இல்லை என்ற குறை நகர வாசிகளுக்கு இருந்தது. ஒரு நகர மண்டபம் வேண்டு மென்று காலேஜ் ஆசிரியர்கள் விரும்பினர். கும்கோணம் காலேஜில் பிரின்ஸிபாலாக இருந்த போர்ட்டர் துரையின் ஞாபகம் நிலவும்படி அவர் பெயரால் ஒரு நகர மண்டபம் அமைக்கலாமென்று கோபால ராவ் முதலியவர்கள் கூறினர். இந்த விஷயத்தில் சாது சேஷையரும், ஆர். வி. ஸ்ரீநிவாசையரும் மிக்க முயற்சி யுடையவராக இருந்தனர். நகரத்திலுள்ள பொது ஜனங்கள் ஒரு கூட்டம் கூடி, போர்ட்டர் ஞாபக மண்டப அமைப்புக் குரிய ‘கமிட்டி’ ஒன்றை நியமித்தனர். அதற்கு ஸ்ரீநிவாசையரே காரிய தரிசியாக இருந்தார்.

நிலப் பரிவர்த்தனை

நகர மண்டபத்தை நிருமிக்க ஒரு குறிப்பிட்ட இடத்தைக் ‘கமிட்டி’யினர் தேர்ந்தெடுத்தனர். அவ்விடம் லக்ஷ்மீ நாராயணபுர மென்ற பெயருள்ளது; வலையர்கள் குடியிருப்பாக இருந்தது. திருவிடைமருதூர் தேவஸ்தானத்துச் சொத்தாகிய அது திருவாவடுதுறை ஆதீனத்தின் வசம் இருந்தது. அந்த மண்டபத்திலிருந்து நிலத்தை வாங்குவதற்கு வழி என்னவென்று ‘கமிட்டி’ அங்கத்தினர்கள் யோசித்தபோது ஸ்ரீநிவாசையர், “நம்முடைய காலேஜ் தமிழ்ப் பண்டிதர் திருவாவடுதுறை மடத்திற்கு மிகவும் வேண்டியவர். அவரைக் கொண்டு காரியத்தை முடித்துக் கொள்ளலாம்” என்று சொல்லி என்னிடமும் விஷயத்தைத் தெரிவித்தார்.