பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

544

என் சரித்திரம்

“நிலங்களை விற்கும் உரிமை ஆதீனத் தலைவருக்கு உண்டா?” என்ற விஷயத்தைப் பற்றிச் சந்தேகம் பிறந்தது. விஷயம் தெரிந்த சிலர், “விற்கக் கூடாது” என்றனர். வேறு சிலர் அதற்குரிய உபாயத்தைத் தெரிவித்தனர். “வேறு ஓரிடத்தில் இந்த நிலத்தின் மதிப்புடைய மற்றொரு நிலத்தை வாங்கியளித்துப் பரிவர்த்தனை செய்து கொண்டால் தடை இராது” என்று கூறினர். அப்படியே செய்யலாமென்ற தீர்மானத்தின் மேல் ஸ்ரீநிவாசையரும் வேறு சில கனவான்களும் என்னை உடனழைத்துக் கொண்டு திருவாவடுதுறைக்குப் போவதாக எண்ணினர்.

1881-ஆம் வருஷம் மே மாதம் 3-ஆம் தேதியன்று இரவு ஸ்ரீ சாதுசேஷையர், சுந்தர ராவ், ஸ்ரீநிவாசையர், எஸ். ஏ. சாமிநாதையர் என்பவர்களுடன் நானும் திருவாவடுதுறைக்குப் போனேன். மறுநாள் முழுவதும் தங்கிச் சுப்பிரமணிய தேசிகரிடம் பேசினோம். என்னுடன் வந்திருந்த அன்பர்களிற் சிலர் அதற்கு முன் மடத்தைப் பாராதவர்கள்; அதனால் அதன் உண்மையான சிறப்பை அதுவரையில் அவர்கள் அறிந்து கொள்ளாமல் இருந்தனர். அன்று அங்குள்ள அமைப்புக்களையும், காரியங்களெல்லாம் நடைபெற்று வரும் ஒழுங்கையும் கண்டு மகிழ்ந்தனர்.

சுப்பிரமணிய தேசிகர் யாவருக்கும் தக்க உபசாரங்கள் செய்வித்தார். அவர் பேசிக்கொண்டு வந்தபோது அப்பேச்சிலிருந்து அவர் நல்ல நூற்பயிற்சி யுடையவரென்பதை ஆசிரியர்கள் அறிந்து கொண்டனர். சிவஞான போத பாஷியத்திலும் தொல்காப்பியச் சூத்திர விருத்தியிலும் சில பாகங்களைப் படிக்கச் சொல்லி விளக்கினார். அவற்றை நானே படித்தேன். இடையிடையே ஸம்ஸ்கிருத சுலோகங்களையும் வியாகரணச் செய்திகளையும் சுப்பிரமணிய தேசிகர் எடுத்துரைத்ததைக் கேட்டு யாவரும் மகிழ்ச்சி அடைந்தனர். நான் அங்கே படித்ததையும் தேசிகருடன் பேசிய முறையையும் கண்ட அவர்கள், “நம்முடைய பண்டிதர் நன்றாகப் படிக்கிறார். பக்குவமாகப் பேசுகிறார்” என்று சொல்லிப் பாராட்டினார்கள்; தேசிகர் அவர்கள் விருப்பத்தின்படியே பரிவர்த்தனையாக வேறு நிலங்களை வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட இடத்தைப் போர்ட்டர் நகர மண்டபத்தின் பொருட்டு வழங்க ஏற்பாடு செய்து விட்டார்.

இந்தச் செய்கையில் எனக்குத் தனியான பெருமை ஒன்று இராவிட்டாலும், நகரவாசிகளுக்கு மாத்திரம் என்னுடைய முயற்சியால்தான் அந்த இடம் சுலபமாகக் கிடைத்ததென்ற எண்ணமும், அதனால் என்னிடத்து ஒரு மதிப்பும் உண்டாயின. நகர மண்டபத்-