பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனது இரண்டாவது வெளியீடு

549

சிந்தாமணி நயம்

சிந்தாமணியிலும் அதன் உரையிலும் மூழ்கியிருந்த எனக்கு மற்ற வேலைகளில் கவனம் செல்லவே இல்லை. அந்த நூலின் புதுமைச் சுவையை நுகர்ந்து நுகர்ந்து இன்புற்றேன். அதனைப் படிக்கப் படிக்கப் பிற்காலத்து நூல்களெல்லாம் எவ்வளவு தூரம் அந்தக் காவியத்திலிருந்து காவிய மரபுகளை அறிந்து அமைத்துக் கொண்டுள்ளனவென்பது நன்கு விளங்கியது. வாரந்தோறும் திருவாவடுதுறைக்குப் போகும்போது சிந்தாமணியில் நான் கண்ட நயங்களையெல்லாம் சுப்பிரமணிய தேசிகரிடம் சொல்வேன். அதில் அங்கங்கே உள்ள மேற்கோள்களிற் பல இன்ன நூல்களென்று விளங்கவில்லையென்றும் கூறுவேன். அவர், “மடத்தில் எவ்வளவோ பழைய நூற் பிரதிகள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்து ஏதாவது உபயோகமாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்” என்று அனுமதியளித்தார். நான் மிக்க நன்றியறிவுடன் அவ்வாறே செய்வதாகச் சொன்னேன்.

நமசிவாய தேசிகர்

சின்னப் பண்டார சந்நிதியாகிய நமசிவாய தேசிகர் சிந்தாமணி விஷயத்தைக் கேட்டு வியப்பார். ஆனால் அவருக்குப் பூர்ணமான திருப்தி அதனால் உண்டாகவில்லை. “ஜைன சமய நூல் அது” என்ற ஞாபகந்தான் அதற்குக் காரணம். நச்சினார்க்கினியர் உரைத் திறத்தைக் கேட்டு மிகவும் பாராட்டுவார்.

அவர் பழையபடி கல்லிடைக்குறிச்சிக்குச் சென்று வசிக்கலானார். அங்கிருந்து எனக்குக் கடிதம் எழுதினார். விடுமுறைகளில் அங்கே வந்து சில நாட்கள் தங்கும்படி சிலமுறை எழுதினார். அவர் விருப்பத்தை நிறைவேற்ற என்னால் இயலவில்லை.

அத்தியாயம்—91

எனது இரண்டாவது வெளியீடு

திருவானைக்காவில் இருந்த தியாகராச செட்டியாரிடமிருந்து ஒருவர் என்னிடம் ஒரு நாள் வந்தார். அவர் தமிழ் நூல்களைப் படித்தவரென்றும் பின்னும் படிக்க வேண்டுமென்ற ஆசையுடன் இருப்பவரென்றும் திருவாவடுதுறை மடத்தில் சேர்த்து அவரைப்