பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

550

என் சரித்திரம்

படிக்கச் செய்யவேண்டுமென்றும் செட்டியார் எழுதியிருந்தார். அவர் என்னைவிட ஐந்தாறு வருஷங்கள் பிராயத்தில் சிறியவராக இருக்கலாம்.

திருமானூர் அ. கிருஷ்ணையர்

அவர் திருமானூரென்னும் ஊரினர்; கிருஷ்ணையரென்பது அவர் பெயர். தாம் திருச்சிராப்பள்ளியில் இருந்ததாகவும், திருவானைக்காவில் செட்டியார் இருப்பது தெரிந்து அவரிடம் சென்று படிக்க முயன்றதாகவும் அவர் தளர்ச்சி மிகுதியினால் பாடஞ் சொல்ல இயலாத நிலையில் இருப்பதாகவும், அதன்மேல் தம்மை என்னிடம் அனுப்பியதாகவும் சொன்னார். நான் அவரைப் பரீட்சித்தேன். திருவிளையாடற் புராணத்திலிருந்து பல செய்யுட்களைப் படலம் படலமாக அவர் பாராமலே சொன்னார். அவர் அவற்றைச் சொல்லும்போதே அச் செய்யுட்களின் கருத்தில் அவர் மனம் ஈடுபட்டு நிற்பதை உணர்ந்தேன். சாரீரம் இனிமையாக இருந்தது. அவர் கையெழுத்தும் நன்றாக இருந்தது. நல்ல சிவபக்தியுடையவரென்பதை அறிந்து கொண்டு, ‘இவரைப் பிற்காலத்தில் நாம் பயன் படுத்திக்கொள்ளலாம்’ என்று எண்ணினேன்.

அவருக்குத் தமிழ்க் கல்வியின்பால் இருந்த ஊக்கத்தை அறிந்து திருவாவடுதுறைக்கு அழைத்துச் சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் ஒப்பித்தேன். அவர் அங்கே தேசிகரிடத்திலும் மடத்து வித்துவானாக அக்காலத்தில் இருந்து வந்த மதுரை இராமசாமி பிள்ளையிடத்திலும் தமிழ் நூல்களைப் படித்துக் கொண்டு ஒழுங்காக இருந்து வந்தார். நான் ஒவ்வொரு வாரத்திலும் அங்கே செல்லும் போது அவரைக் கண்டு பேசுவேன். அவரது கல்வி வர வர வளர்ச்சி பெறுவதை அறிந்து மகிழ்வேன்.

இவ்வாறு இருந்து வருகையில் வேலூரிலுள்ள மஹந்து ஹைஸ்கூலில் ஒரு தமிழ்ப் பண்டிதரை நியமிக்க வேண்டியிருந்தது. கிருஷ்ணையர் அதற்கு விண்ணப்பம் செய்தார். நானும் தக்கவர்களிடம் சொன்னதோடு சிலருக்குக் கடிதமும் எழுதினேன். அவருக்கே அவ்வுத்தியோகம் கிடைத்தது. அவர் அதனை மேற்கொண்டு நன்றாகப் பாடஞ் சொல்லி வந்தார். அடிக்கடி எனக்குக் கடிதம் எழுதுவார். அவற்றில். நிர்ப்பந்தமான வேலையில் தாம் இருப்பதை விரும்பவில்லையென்றும், திருவாவடுதுறைக்கு வந்து படித்துக் கொண்டிருப்பதையே விரும்புவதாகவும் எழுதுவார். விடுமுறை நாட்களில் கும்பகோணத்துக்கு வந்து என்னுடன் இருந்து ஏடு பார்த்தல் முதலிய உபகாரங்களைச் செய்து வருவார்.