பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனது இரண்டாவது வெளியீடு

551

நமசிவாய தேசிகர் மறைவு

1883-ம் வருஷ ஆரம்பத்தில் கல்லிடைக்குறிச்சியில் சின்னப் பண்டார சந்நிதியாகிய நமசிவாய தேசிகர் பரிபூரணம் அடைந்தார். அதனால் மடத்தைச் சார்ந்தவர்கள் மிக்க வருத்தத்தை அடைந்தனர். தமிழிற் சிறந்த பண்டிதராகிய அவர் திருவாவடுதுறை யாதீனத் தலைமைக்குப் பலவகையாலும் தகுதியுடையவர். கல்வியறிவு நிரம்பிய சுப்பிரமணிய தேசிகருக்குப் பிறகு அந்த ஸ்தானத்தை வகித்து ஆதீனத்தின் புகழைப் பாதுகாத்து வருவாரென்று யாவரும் நம்பியிருந்தனர். நிர்வாகத் திறமை மிக்கவர். கல்லிடைக்குறிச்சியிலிருந்து கிராமங்களை நன்றாகப் பாதுகாத்து வந்ததோடு பல புதிய கிராமங்களையும் விலைக்கு வாங்கினார். அவரால் மடத்தில் பொருட்செல்வமும் கல்விச் செல்வமும் ஒருங்கே சிறந்து விளங்குமென்று யாவரும் எண்ணி மகிழ்ந்திருந்தனர். நாமொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது. என்ன செய்யலாம்!

இந்தச் செய்தியை அறிந்து நான் மடத்திற்குச் சென்று சுப்பிரமணிய தேசிகரை விசாரித்தேன். சிறந்த துறவியாகிய அவர் அதைப்பற்றி அதிகக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. “படிப்பிலும் சாமர்த்தியத்திலும் சிறந்தவரென்று எண்ணினோம். ஸ்ரீ நமசிவாய மூர்த்தியின் திருவுள்ளம் இதுபோலும்” என்று சுருக்கமாகத் தம் கருத்தை வெளியிட்டார். நான் நமசிவாய தேசிகரிடம் சில நூல்கள் பாடங் கேட்டிருக்கிறேன். அவர் காலமாவதற்கு முன் எனக்கு எழுதிய கடிதங்களில் என்னைக் கல்லிடைக்குறிச்சிக்கு வரவேண்டுமென்று வற்புறுத்தி எழுதியிருந்தார். நான் போவதற்கு இயலவில்லை. இந்த நினைவுகள் வந்து எனக்கு மிக்க துயரத்தை உண்டாக்கின.

தாமோதரம் பிள்ளை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில் இருந்தார். தொல்காப்பியம் முதலிய பழைய நூல்களை அச்சிடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். வீர சோழியத்தையும் அவர் வெளியிட்டார். பிறகு இறையனாரகப் பொருளுரையையும், திருத்தணிகைப் புராணத்தையும் வெளியிடத் தொடங்கினார். திருவாவடுதுறை மடத்தில் பழைய ஏட்டுப் பிரதிகள் இருக்கின்றன என்பதை அறிந்து ஆதீனத் தலைவருக்கு அவற்றை அனுப்ப வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொண்டார். சுப்பிரமணிய தேசிகர் அக்கடிதங்களை