பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிருஷ்ண சாஸ்திரிகள்

35

யார் கண்டதில்லை. அக்காலத்தில் அறிந்தபோது என் தந்தையாரிடம் முளைத்திருந்த சிவபக்தி வலிவுடையதாயிற்று.

கனம் கிருஷ்ணையர் வாழ்க்கை முடிவடைந்தது. அப்போது என் தந்தையார் துடித்துப் போனார். தம் அருமைக் குருவினிடத்தில் அவர் வைத்திருந்த பக்தி அவர் வாழ்நாள் முழுவதும் மங்கவே இல்லை. அடிக்கடி, “அவர்களைப்போல் இனி யாரைப் பார்க்கப் போகிறேன்!” என்று சொல்லுவார். அப்போது அவர் கண் கலங்கும்.

அப்பால் என் பிதா உடையார்பாளையம் சென்று ஜமீன்தாருடைய ஆதரவிலே இருந்து வரலானார். கனம் கிருஷ்ணையருக்குப் பிறகு அவரது ஸ்தானத்தை வகிப்பதற்கேற்ற சங்கீத வித்துவான் ஒருவரைக் கச்சிக் கலியாணரங்கர் தேடிக் கொண்டிருந்தார். தாளப்பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகளின் குமாரராகிய சுப்பராயரென்னும் வித்துவானை வருவித்து அவரைத் தம்முடைய ஆஸ்தான சங்கீத வித்துவானாக நியமித்துக் கொண்டார்.

என் தகப்பனார் சுப்பராயரிடம் மிக்க பக்தியோடு ஒழுகியும், கனம் கிருஷ்ணையருடைய கீர்த்தனங்களைப் பாடி ஜமீன்தாரையும் மற்றவர்களையும் உவப்பித்தும் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு அவரும் ஸமஸ்தானத்து வித்துவானாகவே சில காலம் இருந்து வந்தார்.

அத்தியாயம்—7

கிருஷ்ண சாஸ்திரிகள்


வாழ்நாள் முழுவதும் சிவ பூஜையும் ஜபம் முதலிய கர்மானுஷடானங்களுமே புரிந்து வந்து வேறு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் உள்ளும் புறமும் தூய்மையுடன் ஒரு கிருகஸ்தர் வாழ்க்கை நடத்துவதென்றால் அது சாத்தியமென்று இக்காலத்தில் தோன்றாது. ஆனால், எங்கள் மாதாமகர் (தாயாரின் தகப்பனார்) அவ்வாறு இருந்தவர். அவர் பெயர் கிருஷ்ண சாஸ்திரிகளென்பது.

அவர் காவிரியின் வடகரையில் கஞ்சனூரென்னும் ஸ்தலத்துக்கு வடகிழக்கே ஒன்றரை மைலிலுள்ள சூரியமூலை யென்னும் ஊரில் இருந்தார். அவர் ருக்வேதத்திற் பாரங்கதர்; சிவ பக்தியிற் சிறந்தவர். ஹரதத்த சிவாசாரியார், அப்பைய தீக்ஷிதர், நீலகண்ட தீக்ஷிதர், திருவிசைநல்லூர் ஐயா அவர்களென்னும் ஸ்ரீதர வேங்கடேசர் முதலிய பெரியோர்கள் இயற்றிய சிவ ஸ்தோத்திரங்களிலும்