பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

என் சரித்திரம்

நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. எப்பொழுதும் அவருடைய வாயிலிருந்து சிவநாமம் இனிய மெல்லிய தொனியிலே வெளிவந்து கொண்டிருக்கும். வண்டின் ரீங்காரத்தைப் போல உள்ள அந்தச் சிவநாமத்திலே நான் இளமையிலே ஈடுபட்டேன். என்னை அறியாமல் நானும் சிவநாம ஜபம் என் ஆறாம் பிராய முதலே செய்யத் தொடங்கினேன். இன்றளவும் ‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ அந்த ஜபத்தைச் செய்து கொண்டுவருகிறேன்.

இளமையில், கிருஷ்ண சாஸ்திரிகளுடைய திருவாக்கிலிருந்து எழுந்த அந்த நாமத்தின் இனிமை என் கருத்தில் மிகவும் நன்றாகப் பதிந்து விட்டது. பிறகு நான் முறையாகப் பல மந்திர ஜபங்களை உபதேசம் செய்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் முன் எனக்கு முதல் உபதேசமாக என் நெஞ்சில் தானே ஊன்றியது சிவநாமத்தான்; அதை ஊன்ற வைத்த முதற் குரு என் மாதாமகராகிய கிருஷ்ண சாஸ்திரிகளே யாவர்.

புதுக்கோட்டையைச் சார்ந்த ஆரணப்பட்டி என்னும் ஊரில் அவர் இருந்தார்; பதினான்கு பிராயத்தில் தம் தந்தையாரிடம் பார்த்திப பூஜையும் ஸ்படிக லிங்க பூஜையும் பெற்றுக்கொண்டனர். அந்த ஸ்படிக லிங்கமாகிய மூர்த்திக்குச் சிதம்பரேசரென்பது திருநாமம். அவர் நாள்தோறும் லக்ஷம் சிவநாம ஜபம் செய்வார். ஆருணம் சொல்லி 124 சூரிய நமஸ்காரம் செய்து ஸஹஸ்ரநாம பாராயணம் பண்ணுவார். விடிய நான்கு நாழிகை தொடங்கி இரவு பத்து நாழிகை வரையில் பெரும்பாலும் வைதிக மார்க்கத்திலேயே அவருடைய காலம் செல்லும்.

தம்முடைய தந்தையார் காலஞ்சென்ற பிறகு ஆரணப்பட்டியிலே இருந்து வருகையில், அவருடைய மூத்த சகோதரியார், புருஷர் காலஞ் சென்றதனால் தம் குழந்தைகளுடன் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டார். அது முதல் அவரே குடும்பத்தின் பொறுப்பை வகித்து நடத்தத் தொடங்கினார். சிவ பூஜா துரந்தரராகிய கிருஷ்ண சாஸ்திரிகள் தம்முடைய தமக்கையார் அடைந்த கோலத்தைக் கண்டு வருந்தினாலும், ‘எல்லாம் ஈசன் செயல்’ என்று எண்ணுபவராதலால் ‘‘நமக்குக் குடும்பத் தொல்லை இராவண்ணம் திருவருள் இவ்வாறு செய்வித்தது போலும்’’ என்று ஒருவாறு ஆறுதலுற்றார். சில காலம் அங்கே இருந்து வந்தபோது தம்முடைய பந்துக்கள் நிறைந்துள்ள சோழ நாட்டில் காவிரிக் கரையை அடுத்துள்ள ஊர்களில் ஈசுவர ஆராதனம் செய்துகொண்டு காலங் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. குடும்ப நிர்வாகத்தில் தமக்கு ஒரு சம்பந்தமும் இல்லாமையால் எந்தச் சமயத்திலும் புறப்படும் நிலையில்தான் அவர் இருந்தார்.