பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

554

என் சரித்திரம்

அழகாயிருக்குமென்ற செய்திகளை நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை. அச்சில் வந்துவிட்டால் கௌரவமாகக் கருதும் காலம் அது. சுபானு வருஷம் ஆனி மாதம் (1883 ஜூன் ௴) அப்புராணம் அச்சிட்டு நிறைவேறியது. சோமசுந்தர நாயகர் அப்பதிப்பிற்குச் சிறப்புப்பாயிரம் அளித்தார். புஸ்தகம், நானும் தியாகராச செட்டியாரும் சேர்ந்து பதிப்பித்ததாக வெளியாகியது. சிறப்புப் பாயிரத்தில் இதைச் சோமசுந்தர நாயகர்,

“திருவ ருங்கலைச் சாமிநா தப்பெயர் சேர்ந்த
பொருவ ரும்பெரு மறையவன் கலையுணர் புலமை
ஒருவ ரும்புகழ்த் தியாகரா சப்பெய ருரவோன்
இருவ ரும்பதிப் பித்துநல் கினரிலங் குறவே”

என்று குறிப்பித்திருக்கிறார்.

இந்தப் புஸ்தகம் நான் பதிப்பித்த இரண்டாவது வெளியீடு. பிள்ளையவர்கள் நூலைப் பதிப்பிக்கும் புண்ணியம் வாய்த்ததுபற்றி எனக்கு உண்டான திருப்திக்கு அளவில்லை. அது மட்டும் அன்று. நான் சீவகசிந்தாமணியைப் பரிசோதித்துப் பதிப்பிக்க வேண்டுமென்ற சங்கற்பம் செய்து கொண்டிருந்தேன். அந்தப்படி நன்கு நிறைவேற வேண்டுமே என்ற கவலை என் மனத்தில் இருந்தது. பிள்ளையவர்கள் உயிரோடு இருந்தால் அவருடைய அறிவும் அன்பும் எனக்குத் துணையாக இருந்திருக்கும். அவர் இல்லாவிட்டாலும் முதலில் அவருடைய நூலைப் பதிப்பித்த பிறகு சிந்தாமணியைத் தொடங்குவது நல்ல அறிகுறியென்று நான் நினைத்தேன். சந்தர்ப்பமும் அப்படி அமைந்தது. பிள்ளையவர்கள் இயற்றிய புராணங்களுள் மாயூரப் புராணமும் திருநாகைக் காரோணப் புராணமும் அவர்கள் காலத்திலேயே சென்னையில் அச்சாயின. அந்தப் புராணப் பதிப்புக்களை ஒட்டியே குடந்தைப் புராணமும் அமைந்திருந்தது. தேவாரப் பதிகங்கள், சிறப்புப்பாயிரம், நூல் என்னும் அங்கங்களுடன் அது விளங்கியது. புஸ்தகத்தைப் பார்க்கப் பார்க்கப் பிள்ளையவர்கள் ஞாபகம் வந்தது. சுப்பிரமணிய தேசிகர் புராணப் பதிப்பைக் கண்டு மிகவும் பாராட்டினார். “இப்படியே அவர்கள் இயற்றிய நூல்களை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தினால் நலமாக இருக்கும்” என்று சொன்னார். ‘அத்தகைய புண்ணியம் கிடைக்கும் படி இறைவன் திருவருள் செய்ய வேண்டும்’ என்று மனத்துக்குள் வேண்டிக் கொண்டேன்.