பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எனது இரண்டாவது வெளியீடு

553

”பங்குனி மதியிலுற்பத்தியான தங்கள் ‘சினேகம் பற்குனன் போலச் சீர்பெருகுவதாக

சென்னபட்டணம்,
சித்திரபானு ௵
பங்குனி௴ 18௳
(25—3—1883)
இங்ஙனம்,
தங்கள் ஊழியன்,
சி. வை. தாமோதரம் பிள்ளை.”

இறையனாரகப் பொருளும் தணிகைப் புராணமும் நிறைவேறியவுடன், தாமோதரம் பிள்ளை திருவாவடுதுறை மடத்துக்கும் எனக்கும் பிரதிகள் அனுப்பினார். தணிகைப் புராணக் குறிப்புக்களை இராமசாமி பிள்ளையிடமிருந்து பெற்றுக்கொண்டும் அவர் என்ன காரணத்தாலோ பதிப்பிக்கவில்லை. ‘பிள்ளையவர்கள் சொன்ன அருமையான குறிப்புக்களை இவர் லக்ஷியம் செய்யவில்லையே. நல்ல பொருள் கிடைத்ததென்று மிக்க மகிழ்ச்சியோடு உபயோகப் படுத்திக் கொள்ளத் தெரியவில்லையே!’ என்று நான் எண்ணினேன். சுப்பிரமணிய தேசிகரும் அதே கருத்தை உடையவராக இருந்தார்.

தாமோதரம் பிள்ளை கும்பகோணத்திற்கே வந்து வசிக்கப் போகிறாரென்பது தெரிந்து எனக்கு ஓர் ஆறுதல் உண்டாயிற்று. சேலம் இராமசுவாமி முதலியார் கூறியபடி, பழைய நூல்களை ஆராய்வாரும் படிப்பாரும் இல்லாமல் பிற்கால நூல்களையே படிப்பவர்கள் மலிந்த தமிழ் நாட்டில் எனக்குத் துணை செய்வார் ஒருவரும் இல்லை. நானோ அந்த ஆராய்ச்சியில் நூதனமாகப் புகுந்தவன். ஆனாலும் எப்படியாவது விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மாத்திரம் மட்டுக்கு மிஞ்சி யிருந்தது. இந்த நிலையில் பழங்காலத்துத் தமிழ் நூல்களை அச்சிடும் விஷயத்தில் ஊக்கமுள்ள ஒருவர் கும்பகோணத்துக்கு வரப்போகிறாரென்று அறிந்தவுடன் எனக்கு மகிழ்ச்சி யுண்டாயிற்று.

திருக்குடந்தைப் புராணம்

சிந்தாமணி ஆராய்ச்சியோடு திருக்குடந்தைப் புராணப் பதிப்பும் நடைபெற்று வந்தது. வடமொழி மூலத்தையும் தமிழ்ச் செய்யுளையும் ஒப்பு நோக்கியபோது சில இடங்களில் திருத்த வேண்டியிருந்தது. செட்டியாருக்கு அவ்விஷயத்தைத் தெரிவித்தேன். அவர் பிள்ளையவர்கள் பெயருக்குக் குறைவு வராதபடி செய்வது நம் கடமையென்று எழுதினார். அதனால் எங்கெங்கே ஒழுங்கு படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் அவ்வாறே செய்தேன். அப்புராணப் பதிப்பில் அச்சுத்தாள்களைத் திருத்தும் முறையை நான் தெரிந்து கொண்டேன். ஆனாலும் பதிப்பு எப்படியிருந்தால்