பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

562

என் சரித்திரம்

செலவு செய்து பொருளைச் சேமித்துச் சீட்டுப் போட்டார். அவருடைய முயற்சியின் பயனாக 1884-ஆம் வருஷ ஆரம்பத்தில், எங்கள் பரம்பரைச் சொத்தாகிய நிலத்தை ஒற்றியிலிருந்து ரூ. 770 செலுத்தி மீட்டோம். பல காலம் பரம்பரையாகக் குடும்பத்துக்குச் சொந்தமாக வந்த நிலம் பிறர் கையில் உள்ளதேயென்ற வருத்தம் என் தந்தையாருக்கு இருந்தது. ஆயினும் அதை மீட்க முடியாத நிலையிலிருந்தார். இறைவன் திருவருளால் எனக்கு உத்தியோகம் கிடைத்ததும் கண்ணும் கருத்துமாகச் சேமித்த பணத்தைக் கொண்டு, முதலில் அந்த நிலத்தை மீட்டார் புதிய நிலமொன்று வாங்கியிருந்தாற்கூட அவருக்கு அவ்வளவு திருப்தி ஏற்பட்டிராது.

சேலம் இராமசுவாமி முதலியார்

இந்த நிலையில் எனது சிந்தாமணி ஆராய்ச்சி நன்றாக நடந்து வந்தது. இன்ன இன்ன பகுதிகளைப் படித்தேனென்று இராமசுவாமி முதலியாருக்கு எழுதுவேன். அவர் மிக்க சந்தோஷத்தைத் தெரிவித்து விடை எழுதுவார். 1880-ம் ௵ அக்டோபர் மாதம் 30ஆம்௳Œ எழுதிய கடிதமொன்றில் “....சிந்தாமணி முழுவதும் ஒரு விசை தாங்கள் பார்த்ததாகவும் அதில் சில சந்தேகங்கள் இருப்பதாகவும் தங்கள் கடிதத்தால் தெரிய வருகிறது. மறுபடி ஒரு விசை பார்க்கும் பக்ஷத்தில் சந்தேகங்கள் ஏறக்குறைய முழுவதும் தீர்ந்து விடுமென்று எனக்குத் தோற்றுகிறது. தங்களுடன் மறுபடியும் அந்தப் புஸ்தகத்தைப் படிக்க எனக்கு எப்பொழுது உதவுமோ கடவுளுக்குத் தான் தெரியும். ஆகிலும் இருவரும் ஒரு விசை படிப்போமென்ற நம்பிக்கை மாத்திரம் இருந்து கொண்டேயிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். அதனால் அவருக்குச் சிந்தாமணியிலுள்ள விருப்பமும் என்பாலுள்ள அன்பும் புலப்பட்டன. ‘சென்னைக்குச் சென்று முதலியாரோடு சில காலம் இருந்து வர வேண்டும்’ என்ற ஆவல் எனக்கு உண்டாயிற்று.

இடையில் தியாகராச செட்டியாரை ஒரு முறை போய்ப் பார்த்து வந்தேன். சிந்தாமணியைப் பற்றி அவரிடம் சொல்லிய போது அவர் மிக்க குதூகலத்தோடு என்னைப் பாராட்டினார். விளங்காத மேற்கோள்களில் திருக்கோவையாரிலுள்ள சிலவற்றை அவர் ஞாபகத்திலிருந்து சொன்னார். அவற்றைக் குறித்துக் கொண்டேன். ஒரு சமயம் அவர் பூவாளூர்ப் புராணத்தை அச்சிட்டார். அவர் விரும்பியபடி நானும் அதைப் பார்வையிட்டுச் சிறப்புப் பாயிரம் கொடுத்தேன்.