பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று லாபங்கள்

563

மகாமகம்

தாருண வருஷம் மாசி மாதம் (1885 மார்ச்சு) மகாமகம் வந்தது. அப்போது கும்பகோணத்தில் அளவற்ற ஜனங்கள் கூடினர். தியாகராச செட்டியாரும் வந்திருந்தார். திருவாவடுதுறையிலிருந்து ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் பரிவாரத்துடன் விஜயம் செய்து கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள தங்கள் மடத்தில் தங்கியிருந்தனர். பல கனவான்களும் வித்துவான்களும் வந்து அவரைக் கண்டு பேசி இன்புற்றுச் சென்றனர். அக்காலத்திலெல்லாம் நான் தேசிகருடனே இருந்து வந்தேன். அதனால் பல புதிய மனிதர்களை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது.

மடத்தின் ஆதரவில் வளர்ந்த எனக்கு என் உத்தியோக வருவாயிலிருந்து தக்க சமயத்தில் ஏதேனும் ஒரு தர்மம் மடத்தில் நடத்த வேண்டுமென்று ஓர் எண்ணம் இருந்தது. அதனை மகாமக காலத்தில் நிறைவேற்றினேன். சுப்பிரமணிய தேசிகரிடம் நூறு ரூபாய் கொடுத்து, “மடத்தில் மகேசுவர பூஜையில் ஒரு பாகத்துக்கு வைத்துக்கொள்ள வேண்டும்” என்று சொன்னேன். தேசிகர் மிகவும் மகிழ்ந்து. “மடத்துப் பிள்ளையாகிய நீங்கள் இப்படிச் செய்ய வேண்டியது அவசியமில்லையே” என்றார். நான் உசிதமாக விடை அளித்தேன். மகாமக விழா முடிந்தபின் திருவாவடுதுறைக்குத் திரும்புகையில் என் தந்தையாருக்கும் எனக்கும் பீதாம்பரங்களும், என் குமாரன் சிரஞ்சீவி கல்யாணசுந்தரத்திற்குச் சந்திரஹாரமென்னும் பொன்னாபரணமொன்றும் அளித்தார்.

மத்தியார்ச்சுன மான்மிய முயற்சி

ஆதீனக்காறுபாறும், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி ஆலய விசாரணக் கருத்தருமாகிய சுப்பிரமணியத் தம்பிரானென்பவர் அந்த ஸ்தல சம்பந்தமாகத் தாம் செய்து வரும் கைங்கரியங்களை ஆதீன கர்த்தரிடம் விண்ணப்பித்துக்கொள்ளுகையில் சில காலமாக அவ்வாலயத்தில் நின்று போயிருந்த வஸந்தோத்ஸவத்தை மீட்டும் நடத்த வேண்டுமென்று சொன்னார். தேசிகர் அப்படியே உத்தரவு கொடுத்தார். அந்த உத்ஸவம் நடப்பதற்குரிய ஏற்பாடுகள் நடை பெறலாயின தம்பிரான் தேசிகருடைய முன்னிலையில் என்னை நோக்கி, “திருவிடைமருதூர் ஸ்தலப் பெருமையைப் பெரும்பாலோர் நன்றாகத் தெரிந்து கொள்ளவில்லை. பழைய புராணங்கள் இருந்தாலும் அவற்றைப் படித்துப் பொருள் தெரிந்துகொள்பவர் மிகவும் சிலரே. ஆதலின் தாங்கள் அந்த ஸ்தலமாகாத்மியத்தைச்