பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

570

என் சரித்திரம்

சீவகன் பேசுவான்; விளையாடுவான்; வீரச் செயல் புரிவான்; இன்ப விளையாட்டிலே ஈடுபட்டிருப்பான்; காந்தருவதத்தை காட்சி யளிப்பாள்; குணமாலை தோன்றுவாள்.

இவ்வளவு காட்சிகளினிடையே என் உடம்புதான் இரவில் தனியாக இருக்குமேயன்றி என் மனம் சிந்தாமணிப் பிரபஞ்சத்திலே விரிந்த இடங்களையும் நீண்ட கால நிகழ்ச்சிகளையும் அளவிட்டு இன்புறும். இடையிடையே ஆராய்ச்சி நினைவு உண்டாகும், சிக்கல்களும் கலக்கங்களும் தோன்றும். அப்போது சீவகசிந்தாமணிக் காட்சிகள் மறையும். புஸ்தகமும் எழுத்துக்களும் முன் நிற்கும். பாட பேதங்கள் வந்து போரிடும். விஷயம் விளங்காத குழப்பத்தில் தடுமாறுவேன். திடீரென்று புதிய ஒளி உண்டாகும். விஷயம் தெளிவாகும். மறுபடி புஸ்தகமும் எழுத்தும் இந்த உலகமும் மறைந்து விடும்.

தாமோதரம் பிள்ளையின் பழக்கம்

இப்படியிருக்கையில் சென்னையிலிருந்த சி. வை. தாமோதரம்பிள்ளை எனக்கு எழுதியபடியே கும்பகோணத்தை அடைந்து அங்கே வக்கீலாக இருந்து வந்தார். அவர் முன்னமே ஒரு பெரிய உத்தியோகத்திலிருந்து பென்ஷன் பெற்றவர். அவர் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து தமிழ் நூல்கள் விஷயமாகச் சல்லாபம் செய்து பழகலானார். கும்பகோணத்துக்கு அருகேயுள்ள கருப்பூரில் ஜாகை வைத்துக் கொண்டிருந்தார். அவர் வீட்டுக்கு நானும் அடிக்கடி போய் வருவதுண்டு தாம் பல தமிழ் நூல்களைப் பதிப்பிக்க எண்ணியிருப்பதாகத் தெரிவித்ததோடு திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க வேண்டுமென்று விரும்பினார். அங்ஙனமே நான் அவரை அழைத்துச் சென்று தேசிகருக்குப் பழக்கம் செய்வித்தேன். மடத்தில் பல ஏட்டுச் சுவடிகள் இருக்குமென்றும் அவற்றைத் தம்முடைய பதிப்புக்கு உபயோகித்துக் கொள்ளலாமென்றும் அவர் கருதினார். தேசிகருடன் செய்த சம்பாஷணையிலிருந்து அவருடைய கல்வியறிவையும் பெருந்தன்மையையும் உணர்ந்து கொண்டார்.

கும்பகோணத்திலுள்ள கனவான்களையும் வக்கீல்களையும் தாமோதரம் பிள்ளைக்கு அவர் விரும்பியபடி பழக்கம் செய்வித்தேன். நாங்கள் இருவரும் அடிக்கடி தமிழ் சம்பந்தமானவிஷயங்களைப் பேசுவோம். அவர் பல விஷயங்களைக் கேட்பார்; நான் சொல்லுவேன். யாழ்ப்பாணத்திலுள்ள பல வித்துவான்களுடைய செய்திகள் அவர் மூலமாகத் தெரிய வந்தன. அவருடன்