பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடையே வந்த கலக்கம்

573

மென்று தீர்மானித்துச் சில நூல்களை வெளியிட்டிருக்கிறேன். ஆகையால் என்னைத் தமிழுலகு நன்றாக அறியும். சிந்தாமணி என் பதிப்பாக வெளிவந்தால் அதற்கு ஏற்படும் கௌரவமே வேறு. அதனோடு உங்கள் பெயரும் வெளிப்படும்.

நான்:— நீங்களும் ஆரம்பத்தில் என்னைப் போலத்தானே இருந்திருப்பீர்கள்? நான் பதிப்பித்து வெளியிட்ட பிறகுதானே உலகம் அதை மதிப்பதும் மதியாததும் தெரிய வரும்?

‘இராமாயணம் பதிப்பிக்கலாம்’

தாமோ:— ஏதாவது நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் உங்களுக்கிருந்தால் கம்பராமாயணத்தை வெளியிடலாமே! நீங்கள் பல வருஷங்களாக ஆராய்ந்து வைத்திருக்கிறீர்கள். அருமையான திருத்தங்களை உங்கள் பிரதியிற் கண்டேன். இராமாயணத்துக்கு எல்லா நூல்களையும் விட மதிப்பு அதிகம். பதிப்பித்தால் புண்ணியமும் உண்டு.

நான்:— அதிலும் பொருட் செலவு இல்லையா?

தாமோ:— இருந்தால் என்ன! இராமாயணம் பதிப்பிப்பதாக இருந்தால் பிரபுக்கள் நான் நானென்று பொருளுதவி செய்ய முன்வருவார்கள். ஒவ்வொரு காண்டமாகப் பதிப்பியுங்கள். நானே ஒவ்வொரு காண்டத்துக்கும் ஒவ்வொரு கனவானை உதவி செய்ய ஏற்பாடு செய்கிறேன். சிந்தாமணிப் பதிப்பை எனக்கு விட்டு விடுங்கள்.

என் மன நிலை

அச்சமயம் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. மனம் சஞ்சலமடைந்தது. சிந்தாமணியைப் பதிப்பிக்கும் விஷயத்தில் தமிழிலும் ஜைன நூல்களிலும் இன்னும் தேர்ந்த அறிவு இருந்தால் நன்றாக இருக்குமென்று ஒரு சமயம் நான் எண்ணியதுண்டு. அப்போது இந்தப் பெரிய காரியத்தை நிறைவேற்ற நமக்குச் சக்தியுண்டா என்ற அபிப்பிராயம் மனத்தே எழும். ஆனாலும் ஒன்றிலும் தளராமல் எப்படியாவது பதிப்பைத் தொடங்கிவிடுவது என்ற உறுதியோடு இருந்தேன். ‘சேலம் இராமசுவாமி முதலியார் இந்நூலைப் பதிப்பிக்கும் விஷயத்தில் வேண்டிய உதவி செய்வதாக வாக்களித்திருக்கிறார். அதை ஆராய்ந்து பதிப்பிப்பதாக ஒப்புக்கொண்டு அதற்கு வேண்டியவற்றைச் செய்து வந்திருக்கிறோம். இப்போது இவரோ இப்படிச் சொல்லி நம் பிரதியை விரும்புகிறாரே!