பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

574

என் சரித்திரம்

நாம் பின் வாங்கலாமா? நம் கைப் புத்தகத்தில் போட்டிருக்கும் ஒவ்வொரு கோடும் புள்ளியும் ஒவ்வொரு குறிப்பும் எவ்வளவு உபயோகமானவை! மற்றவர்கள் கண்களுக்கு ஒரு சிறிய கோடாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் கோட்டின் சங்கேதத்தால் நமக்குத்தோற்றும் விஷயங்கள் வேறு. அந்தக் குறிப்புக்களை இவர் எப்படி உணர முடியும்? நாம் இட்ட ஒவ்வோர் அடையாளமும் எவ்வளவு விஷயங்களை உள்ளடக்கியது? அவற்றை மற்றவர் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? எவ்வளவு ஜைன நூல்கள் படித்து விஷயங்கள் தெரிந்து கொண்டோம்! எவ்வளவு ஜைனர்களிடம் சென்று சமய மறிந்து நயந்தும் பயந்தும் கெஞ்சியும் சந்தேகங்களைத் தெளிந்து கொண்டோம்! எல்லாவற்றையும் வீணாக்கி விடுவதா’ என்று இவ்வாறு சிறிதுநேரம் அவரோடு ஒன்றும் பேசாமல் சிந்தனை செய்தேன்.

அவர் மீட்டும் மீட்டும் பல விஷயங்களைச் சொல்லி என் சிந்தாமணிப் பிரதியை விரும்பினார். அப்போது நான், “என் தந்தையாரவர்கள் வெளியே போயிருக்கிறார்கள். அவர்கள் வந்த பின்பு கேட்டுக் கொண்டு, நாளைக் காலையில் தங்களிடம் வந்து பதிப்பு விஷயத்தைப் பற்றி என் கருத்தைத் தெரிவிக்கிறேன்” என்று சொன்னேன். அவர், “அப்படியே செய்யுங்கள்; இப்போது புஸ்தகத்தைக் கொடுங்கள்; நான் ஒரு முறை பார்த்து வைக்கிறேன். பிறகு உங்கள் தீர்மானப்படியே செய்யலாம். பெரும்பாலும் எனக்கு அனுகூலமாகவே முடியுமென்று எதிர்பார்க்கிறேன்” என்று கேட்டுக் கொண்டார்.

பிரதி கொடுத்தேன்

உள்ளே சென்றேன். நான் ஆராய்ந்து திருத்தி இரண்டு பாகங்களாக எழுதி வைத்திருந்த சிந்தாமணிக் கையெழுத்துப் பிரதியை எடுத்து வந்து அவர் கையில் கொடுத்தேன். உடனே அவர் முகத்தில் ஒரு பிரகாசம் உண்டாயிற்று. அவர் செய்த புன்முறுவலிலே சந்தோஷம் பொங்கியது. “சரி. நான் போய் வருகிறேன். நான் சொன்னவற்றையும் என் வேண்டுகோளையும் தங்கள் தந்தையாரவர்களிடம் தெரிவித்து நாளைக் காலையில் வந்து தங்கள் சம்மதத்தைத் தரவேண்டும்” என்று சொல்லி என்னிடம் விடைபெற்றுப் புஸ்தகத்துடன் தம் வண்டியிலேறித் தம் வீட்டுக்குச் சென்றார்.

புதிய உணர்ச்சி

அது வரையில் சாவதானமாகப் பேசிக் கொண்டிருந்த தாமோதரம் பிள்ளை புஸ்தகம் கைக்கு வந்தவுடன் திடீரென்று