பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

578

என் சரித்திரம்

இராமசுவாமி முதலியார் அங்கே வந்திருந்தார். அவருடைய வரவை அறிந்து சென்று பார்த்தேன். சிந்தாமணிப் பதிப்புக்காகக் கையொப்பம் வாங்குவதைத் தெரிவித்தேன். முன்னெல்லாம் நான் பதிப்பிக்க வேண்டுமென்று சொன்ன அவர் அப்பொழுது, “நீங்கள் இந்தப் பதிப்பு வேலையைத் தொடங்கினால் மிக்க சிரமமாக இருக்குமே. அதிகப் பொருளும் உழைப்பும் காலமும் செலவாகுமே. தாமோரம் பிள்ளை என்பவர் சிந்தாமணியைப் பதிப்பிப்பதில் ஊக்கமுள்ளவராக இருக்கிறாரென்று கேள்வியுற்றேன். தக்கவர்களுடைய சகாயம் அவருக்குக் கிடைக்கும். பணமும் செல்வாக்கும் உடையவராக இருக்கிறார். ஆதலால் இந்த வேலையை அவரே செய்யும்படி விட்டு விட்டு நீங்கள் கவலையின்றி இருக்கலாமே” என்றார்.

அவர் பேச்சைக் கேட்டு நான் திடுக்கிட்டேன். “இந்தச் சிந்தாமணியை ஆராய்வதற்கும் அச்சிட வேண்டுமென்று துணிவதற்கும் மூலகாரணமாக இருந்த சேலம் இராமசுவாமி முதலியாரா இப்படிச் சொல்கிறவர்?” என்று நினைந்து ஆச்சரியமடைந்தேன். அவர் அப்படிச் சொல்வாரென்று நான் கனவிலும் எண்ணவில்லை. அவருக்கு என்னுடைய ஆராய்ச்சியும் தகுதியும் நான் பட்ட சிரமமும் நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் அவர் என் சங்கற்பத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று சொன்னதில் எனக்குச் சிறிது வருத்தமுண்டாயிற்று. ஆயினும் அவர் கூறியதை நான் ஏற்றுக் கொள்ளவேயில்லை.

“சில வருஷங்கள் இராப் பகலாக உழைத்து ஆராய்ந்து வைத்திருக்கிறேன். இம்முயற்சியைக் கைவிட எனக்கு மனமில்லை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்தால் பதிப்பிக்கட்டும். அதை நான் தடுக்கவில்லை. அதற்காக என்னை நிறுத்தச் சொல்லுவது நியாயமாகுமா? நான் எவ்வளவோ ஆவலாக இந்தக் காரியத்தைத் தொடங்கியிருக்கிறேனே” என்று துணிவு தோற்றச் சொன்னேன்.

அவர் உண்மையில் என்பால் உள்ளன்புடையவராதலின் எனக்குச் சிந்தாமணிப் பதிப்பிலுள்ள தீவிரமான சிரத்தையை உணர்ந்துகொண்டார்.

“உங்களுடைய முயற்சியை மாற்றவேண்டுமென்று நான் சொல்லவில்லை. அவர் பலசாலியாக இருக்கிறாரே என்ற எண்ணத்தால் சொன்னேன். உங்கள் தகுதி எனக்குத் தெரியாதா? இதற்குரிய துணிவு உங்களிடத்தில் இருக்கும்போது இது நன்றாக நிறைவேறுமென்றே நான் நம்புகிறேன். என்னாலான உதவியைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்” என்று அவர் கூறியபோது தான் பழைய இராமசுவாமி முதலியாரே இவரென்று நான் இன்புற்றேன்